இனி தெருவில் போவோர் வருவோரையோ, விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளையோ தெருநாய்கள் கடித்தால் அதற்கு சோறு போடுபவர்களே பொறுப்பு என்றும் அதற்கு ஆகும் தடுப்பூசி செலவு மற்றும் சிகிச்சை செலவினை சம்பந்தபட்டவரே ஏற்கவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருப்பதாக செய்தி பரவலாக சமூகவளைதலங்களில் பகிரப்படுகிறது. இதற்கான தீர்ப்பு வரும் செப்.28 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது மிகவும் வரவேற்கத்தக்க கருத்து என பொதுமக்களும் , இது ஜீவகாருண்யத்தை சிதைக்கக்கூடியது என ப்ராணி வளர்ப்பு ப்ரியர்களும் தங்கள் தரப்பு வாதங்களாக முன் வைக்கிறார்கள்.
சமீபத்தில் நாட்டின் பல்வேறு இடங்களில் தெருநாய்கள் பாதசாரிகளை கடித்து வருவதாக செய்திகள் அடிக்கடி வருகின்றன. இத்தகைய நாய்கடி சம்பவங்களால் அதிகம் பாதிக்கபடுவது குழந்தைகளே. அது சில சமயங்களில் மரணத்தை கூட நிகழ்த்துவதாக இருக்கிறது என்பது வருத்தம் தரும் செய்தி.
இம்மாதிரி சம்பவங்கள் தெருநாய்களால் மட்டுமல்லாமல் சிலவகை வளர்ப்பு நாய்களாலும் ஏற்படுகின்றது என்கின்றனர் பொதுமக்கள்.மேலும் தெருநாய்களுக்கு இனப்பெருக்க தடை செய்யும் கருத்தடை சிகிச்சை நடவடிக்கைகள் மேற்கொள்ள படவேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கபடுகின்றது.
இதன் மூலம் வீதிகளில் திரியும் நாய்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படும் எனகிறார்கள் சமூக ஆர்வலர்கள். அதேபோன்று தெருநாய்களுக்கும் முறையாக தடுப்பூசி போடுவதை கண்காணித்து நடைமுறைபடுத்த நகராட்சிகள் முன்வரலாம் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதற்கு எதிர்கருத்தாக பசியால் வாடும் வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிப்பது எங்கள் உரிமையும் கடமையும் . அதற்காக அந்த நாய்கள் கடிப்பவர்களுக்கான சிகிச்சை செலவினை ஏற்பது என்பது நியாமற்ற வாதம் என கருத்து தெரிவிக்கிறார்கள் ப்ராணிகள் வளர்ப்பு ஆர்வலர்கள்.