திரைப்படத்தை பார்த்து விமர்சனம் செய்தால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் எனக்கூறி, ஒரு பெண்ணிடம் 76 லட்சம் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் கவனமாக இருக்க வேண்டும் என்பது தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் நம் அனைவரது கடமையாகும். என்னதான் இணையத்தில் எச்சரிக்கையாக இருக்கும்படி அவ்வப்போது அரசாங்கம் வலியுறுத்தி வந்தாலும், மோசடி கும்பலின் சூழ்ச்சியில் பொதுமக்கள் எப்படியாவது சிக்கிக்கொள்கின்றனர்.
ஹரியானா மாநிலம் குருகிராமிலிருக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பதவியிலிருப்பவர் திவ்யா. கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி டெலிகிராம் மூலமாக ஒரு பெண் திவ்யாவுக்கு அழைப்பு விடுத்து, பகுதி நேர வேலை இருப்பதாக சொல்லியிருக்கிறார். இது எது போன்ற வேலை என திவ்யா கேட்டதற்கு, நீங்கள் அனைத்தையும் செல்போனிலேயே செய்தால் போதும் என அந்த பெண் கூறியிருக்கிறார்.
அதாவது ஒரு செயலியில் இருக்கும் படங்களைப் பார்த்து விமர்சனம் எழுதினால், அந்த படம் பார்த்ததற்கான சம்பளம் தருவதாகக் கூறியுள்ளார். படம் பார்த்தால் பணம் கிடைக்குமா என்று வியந்து போன திவ்யா, உடனே அந்த வேலைக்கு சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. பின்பு இரு தினங்கள் கழித்து தேஜாஸ்ரீ என்ற மற்றொரு பெண் வாட்ஸ் அப் வழியாகத் தொடர்பு கொண்டு, அந்த வேலை தொடர்பான நிபந்தனை பற்றித் தெரிவித்திருக்கிறார்.
அந்த நிபந்தனைகளில், ஒரு நாளைக்கு ஒரு டிக்கெட் உங்களுக்கு கொடுக்கப்படும். ஒரு டிக்கெட்டின் விலை 10,500 ரூபாய். அந்த டிக்கெட் பயன்படுத்தி படங்களைப் பார்த்துவிட வேண்டும். பின்னர், நீங்கள் படம் பார்த்து முடித்த பிறகு டிக்கெட் பணத்துடன் சேர்த்து, உங்களுக்கான பணத்தையும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியிருக்கிறார். இதை கண்மூடித்தனமாக நம்பிய திவ்யாவும், தன்னுடைய பணத்தைக் கட்டி படத்தைப் பார்த்திருக்கிறார்.
அவர் பல டிக்கெட்டுகளை வாங்கி படத்தை பார்த்தாலும், அதற்குரிய பணத்தைத் தராமல் அடுத்தடுத்த டிக்கெட் வாங்கினால் உங்களுக்கு அதிகமாக பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டி மொத்தம் 76 லட்சம் வரை திவ்யாவிடமிருந்து அபகரித்திருக்கிறது அந்த கும்பல்.
ஒவ்வொரு முறை பணத்தை செலுத்தும் போதும், கொடுத்த பணத்தை எப்படியாவது மீண்டும் பெற்று விடலாம் என்ற எண்ணத்தில், தனது பணத்தை தொடர்ந்து செலுத்தியுள்ளார் திவ்யா. இறுதியில் அவர்கள் ஏமாற்றுக் கும்பல் என்பதை உணர்ந்த பிறகு தான், காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய காவல்துறை தரப்பினர், ’’பாதிக்கப்பட்ட திவ்யாவிடம் விசாரித்து வருகிறோம். விரைவில் இந்த ஊழலில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள். இதுபோன்ற மோசடி கும்பலிடமிருந்து எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’ என்று பொதுமக்களுக்கு போலீசார் கோரிக்கை விடுத்தார்கள்.
இணையம் வழியாக இம்மாதிரி வித்தியாசமான மோசடிகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஏதாவது மோசடி செய்தியைக் கேள்விப் பட்டால் அது அங்கேதானே நடந்தது; நமக்கெல்லாம் நடக்காது என அலட்சியமாக இருக்க வேண்டாம். இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொரு செயலிலும் நாம் கவனமாக இருப்பது நம்முடைய கடமையாகும்.