பிரதமர் நரேந்திர மோடிக்கு இப்போது 72 வயதாகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிகிறது. மீண்டும் நான்தான் பிரதமராக இருப்பேன் என்பதை மோடி பல நேரங்களில் சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
2029 ஆம் ஆண்டு தேர்தலில் மோடி விலகிக்கொண்டால் அவருக்குப் பதில் யார் பிரதமராக வருவார் என்ற கேள்வி இப்போதிலிருந்தே எழத் தொடங்கிவிட்டது. உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலரது பெயர் அந்தப் பதவிக்கு அடிபடுகின்றன. ஆனால், பிரதமர் பதவியை யோகி ஆதித்யநாத் குறிவைக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அளித்துள்ள பேட்டியில், “நான் எந்தப் பதவிக்கும் ஆசைப்படவில்லை. மாநில முதல்வராக இருக்கவே விரும்புகிறேன்“ என்று தெரிவித்துள்ளார். நாட்டின் பலம் பிரதமர் நரேந்திர மோடிதான். இந்தியாவுக்குப் புதிய அடையாளத்தைக் கொடுத்தவர் பிரதமர் மோடிதான்.
கடந்த 9 ஆண்டுகளில் மோடி அரசின் திட்டங்களால் பல்வேறு சமூகத்தினரும் பலன் பெற்றுள்ளனர். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பா.ஜ.க. நிறைவேற்றி வருகிறது. அவரது சிறப்பான ஆட்சிக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என்கிறார் யோகி ஆதித்யநாத்.
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றிபெறும். உ.பி.யில் 2019 தேர்தலில் பெற்ற இடங்களைவிட அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றிபெறும். அடுத்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் 300 முதல் 315 இடங்களில் வெற்றிபெறுவது உறுதி என்கிறார் யோகி.
சனாதன தர்மம்தான் இந்தியாவின் ஆன்மா, இந்தியாவின் அடையாளம். நாட்டின் தேசிய மதமும் அதுதான். நான் இந்துத்துவவாதிதான். அதற்காக என்னைச் சாதாரணமானவன் என்றோ கடுமையானவன் என்றோ கருதிவிட முடியாது. இந்துத்துவாவில் மென்மையானது, கடுமையானது என்பது ஏதும் இல்லை. ஒரே இந்துத்துவாதான்.
சமூகத்தில் நல்லிணக்கத்துக்கு எதிராகச் செயல்படுபவர்கள் ஒருநாளும் வெற்றிபெற முடியாது. உண்மைநிலை என்ன என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்கிறார் யோகி.
இந்துத்துவாவை தூக்கிப் பிடிக்கும் அவருடைய பேச்சு, செயல்பாடுகளை உற்றுநோக்கினால், பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாகத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு வருவதாகவே தெரிகிறது.