செய்திகள்

“அறிவு புரட்சியை ஏற்படுத்தி வருகிறது, ‘நான் முதல்வன்’ திட்டம்:” முதல்வர் பெருமிதம்!

கல்கி டெஸ்க்

திமுக அரசால் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது, ‘ நான் முதல்வன்’ திட்டம். இந்தத் திட்டத்தின் ஓராண்டு நிறைவு விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.

இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஏராளமான திட்டங்கள் தமிழகத்துக்கு வந்துள்ளன. அதில், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் கடந்த ஓராண்டாக மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 13 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய, மாநில அரசு வேலைகளுக்கான தேர்வுக்கு  கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பயிற்சி பெற்ற பல்லாயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை கிடைத்து இருக்கிறது.

என் மனதில் உருவானதுதான், ‘நான் முதல்வன் திட்டம்.’ நான் முதல்வன் திட்டம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான திட்டம். தமிழக மாணவர்கள், இளைஞர்கள் பன்முக ஆற்றலில் முன்னேறும் வகையில், ‘நான் முதல்வன்’ திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம்  தலைமுறைக்கும் பயன் தருவதாகும். அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவதில்தான் அதன் வெற்றி அடங்கி இருக்கிறது. ‘நான் முதல்வன்’ என்ற ஒரேயொரு திட்டம் தமிழ்நாட்டில் அறிவு புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. ‘உயர்வுக்கு படி’ என்ற இந்தத் திட்டத்தின் மூலம் 1.5 லட்சம் மாணவர்கள்  பயன் அடைந்து இருக்கிறார்கள். படிப்பு என்பது பட்டம் சார்ந்தது மட்டுமின்றி, திறமை சார்ந்ததாக மாற வேண்டும்.

‘குடிமைப் பணிகள் எனப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் தமிழ்நாடு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. 2016ல்10 விழுக்காட்டுக்கு மேல் இருந்தது, தற்போது 5 விழுக்காடாக உள்ளது. இது என்னை மிகவும் வருந்த வைக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். நாம்தான் அதை மாற்ற வேண்டும். விளையாட்டுத்துறையில் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது போல, ‘நான் முதல்வன்’ திட்டத்தையும் தம்பி உதயநிதி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். எந்த பன்னாட்டு நிறுவனமும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான மனித வளத்தை, ‘நான் முதல்வன்’ திட்டம் உறுதி செய்துள்ளது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக, நேரு உள்விளையாட்டு அரங்கில் ‘நான் முதல்வன்’ திட்ட சாதனை அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். மேலும், ‘சென்னையில் கலைஞர் 100’ என்ற இணையதள பக்கத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நித்திய சொர்க்கவாசல் உள்ள கலியுக வேங்கடேச பெருமாள் கோயில் தெரியுமா?

தோஷங்கள், பாவங்கள் போக்கும் பாப விமோசனப் பெருமாள்!

உலகின் எந்தப் பகுதிகளில் பறவைகளை அதிகம் பார்க்க முடியும்!

ஐஸ்கிரீமின் வரலாறு என்ன தெரியுமா? 

ஆயில் இல்லாமல் சமைப்பது ஆரோக்கியம் தருமா?

SCROLL FOR NEXT