செய்திகள்

தமிழ்நாடு என்று பெயரிட்டது காமராஜர்தான்! தமிழிசையின் விளக்கம்

ஜெ. ராம்கி

தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு தமிழ்நாட்டு அரசியல் வரலாறு பேசுவது பிடித்தமானது. தெலங்கானா ஆளுநராகவும், பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநராகவும் இருந்தாலும் அவ்வப்போது எழும் அரசியல் சர்ச்சைகளுக்கு கருத்து தெரிவிக்காமல் நழுவியதில்லை. தமிழ்நாடு ஆளுநர் சட்டமன்றத்தில் பேசியது குறித்தும், தமிழகம் என்று குறிப்பிடுமாறு பேசியது குறித்து தனிப்பட்ட கருத்தாக ஏற்கெனவே பலமுறை பேசியிருக்கிறார்.

இம்முறை தமிழ்நாடு என்று பெயர் மாற காமராஜரே காரணமாக இருந்ததாக தன்னுடைய பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார்.

எது இருக்கிறதோ? இல்லையோ? உழைப்பாளி என்பது உலகம் முழுவதும் இருக்கக்கூடிய வார்த்தை. நேர்மையான, வளர்ச்சிக்கான ஒரு ஆட்சியை இன்று வரை யாராவது உதாரணம் காண்பிக்க முடியும் என்றால், அது காமராஜர் ஆட்சிதான். காமராஜரின் வழித்தோன்றல்களாக இருக்கக் கூடிய நாம், அவருடைய பெயரை காப்பாற்ற வேண்டும்!

முதன் முதலில் தமிழை ஆட்சி மொழியாக கொண்டு வந்தது காமராஜர்தான். ஆட்சி மொழியாக மட்டுமல்ல; பயிற்று மொழியாகவும் சட்டசபையில் குரல் கொடுத்தவர். 1959-ம் ஆண்டிலேயே தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி கழகத்தை உருவாக்கினார். இன்று தமிழகமா? தமிழ்நாடா? என்ற விவாதம் போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால் தமிழை ஆட்சிமொழியாகவும், பயிற்று மொழியாகவும் ஆக்கியது காமராஜர்தான். இந்த சரித்திரத்தை யாரும் மாற்றி அமைத்துவிட முடியாது.

'1957,58 நிதி நிலை அறிக்கையை சி.சுப்பிரமணியம் தாக்கல் செய்யும்போது, அறிக்கையை தமிழில் தாக்கல் செய்தார். ஆனால் இன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்பவருக்கு தமிழ் சரியாக வராது என்று நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. தமிழ், தமிழ் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் மத்தியில், 1957-ல் தமிழில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது'

'மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என்று மாற்றும் மசோதாவை முன்மொழிந்த சி.சுப்பிரமணியம், மெட்ராஸ் மகாணம் இனி தமிழ்நாடு என்ற பெயரோடு அழைக்கப்பட வேண்டும். தமிழ்நாடு சட்டசபை, தமிழ்நாடு அரசு என்று அழைக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார். அது காமராஜர் ஆட்சி. ஆக தமிழ்நாடு என்ற பெயர் வந்ததற்கு முதலில் காமராஜர், அதற்கு பின் அண்ணா காரணம். ஏனென்றால் யாருடைய உழைப்பையும் குறைத்து மதிப்பிட முடியாது. பின்னர், 1967-ல் அண்ணா சட்டமாக ஆக்கினார். ஆக அறிவித்த காமராஜருக்கும் பெருமை. அதை சட்டமாக்கிய அண்ணாவுக்கும் பெருமை சேர்ந்தது'

தமிழ்நாடு என்று பெயரிட வேண்டும் என்கிற கோரிக்கை முதல் முதலாக 1956-ல் முன்வைக்கப்பட்டது. அப்போது சென்னை மாகாணத்தின் முதல்வராக காமராஜர் இருந்தார். அடுத்து வந்த பத்தாண்டுகளுக்கும் காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்தார். தமிழ்நாடு என்று பெயரிடுமாறு யாரும் போராட்டம் நடத்த தேவையில்லை. காமராஜர் அதை செய்துவிடுவார் என்று பெரியாரும் அறிக்கை விடுத்தார். ஆனால், காமராஜர் ஆட்சியில் இருந்தவரை தமிழ்நாடு என்று பெயர் மாற்ற முடியவில்லை. இதெல்லாம் தமிழிசை தெரியுமா என்று கேள்வி எழுப்புகிறது, அறிவாலய வட்டாரம்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT