வட கொரியா நாட்டின் அதிபர் கிம் ஜோங் உன் மிகப்பெரும் சர்வாதிகாரியாக அந்நாட்டை ஆட்சி செய்து வருகின்றார். அந்த வகையில் தற்போது மேற்கத்திய நாடுகளின் சினிமா படங்களை வடகொரிய மக்கள் பார்ப்பதைத் தடுக்கும் வகையில் புதிய எச்சரிக்கை ஒன்றை அந்நாடு வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதன்படி, ஹாலிவுட் படங்கள் மற்றும் தென்கொரிய படங்களை வடகொரிய நாட்டுக் குழந்தைகள் பார்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையை மீறி ஹாலிவுட் படங்கள் அல்லது தென்கொரிய திரைப்படங்களைப் பார்க்கும் வட கொரிய குழந்தைகள் ஐந்து ஆண்டுகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என அந்நாடு எச்சரிக்கை செய்துள்ளது. மேலும், மேற்சொன்ன தடை செய்யப்பட்ட படங்களைப் பார்க்கும் அந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் ஆறு மாதங்கள் தொழிலாளர் முகாம்களில் அடைக்கப்படுவார்கள் எனவும் அந்நாடு எச்சரிக்கை செய்துள்ளது. இதற்கு முந்தைய காலங்களில் இதுபோன்ற குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டு வந்தனர். ஆனால், இனிமேல் இதுபோன்ற விஷயங்களில் யாருக்கும் கருணை காட்டப்பட மாட்டாது எனவும் அந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், அதிபர் கிம் ஜோங் உன்னின் சமூகக் கொள்கைகளின்படிதான் வட கொரிய நாட்டுப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கிழக்கு ஆசிய நாடான வட கொரியா ஒரு மர்மப் பிரதேசமாகவும் இரும்புத் திரை போர்த்திய நாடாகவும் விளங்கி வருகிறது. அதோடு, இந்த நாட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களும் மிகவும் ரகசியமாகவே பாதுகாக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.