ஜெயிலர் படத்தில் வில்லனாக தோன்றும் வர்மா என்ற கதாபாத்திரத்தில் வரும் நடிகர் விநாயக் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஜெர்சியை அணிந்திருப்பதற்கு அந்த அணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜெயிலர் படத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஜெர்சியை பயன்படுத்திய காட்சியை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் நற்பெயரை கெடுக்கும் விதமாக காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி அந்த அணி நிர்வாகம் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், ஜெயிலர் படத்தில் ஒரு காட்சியில் வில்லனின் அடியாள் ஒருவர், ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஜெர்சியை அணிந்துகொண்டு, பெண் கதாபாத்திரத்தை பற்றி ஆபாசமாக பேசுவதுபோல் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த காட்சியை நீக்க வேண்டும்'' என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி பிரதிபா சிங் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வரும் ஒன்றாம் தேதி முதல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஜெர்சி அணிந்த காட்சிகளை நீக்கி திரையிட வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டனர். மேலும், தொலைக்காட்சி, செயற்கைக்கோள் ஒளிபரப்பு மற்றும் ஓ.டி.டி தளங்களிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் எனவும் தீர்ப்பளித்தனர்.