செய்திகள்

“குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்காவிட்டால் ஜப்பான் காணாமல் போய்விடும்” - மஸாகோ மோரி கவலை!

ஜெ.ராகவன்

ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதே நிலை நீடித்தால் அல்லது குழந்தைகள் பிறப்பு விகிதத்தை உடனடியாக அதிகரிக்காவிட்டால், நாட்டின் சமூக பாதுகாப்பு சீர்குலைந்து, பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து நாளடையில் ஜப்பான் காணாமல் போய்விடும் என்று அந்த நாட்டின் பிரதமர் ப்யூமியோ கிஷிடாவின் ஆலோசகர் மஸாகோ மோரி கவலை வெளியிட்டுள்ளார்.

உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாக ஜப்பான் இருந்து வருகிறது. பொருளாதார ரீதியில் ஒப்பிடும்போது ஜப்பான் முன்னேறிய நாடாக உள்ளது. எனினும் மக்கள் தொகையில் அந்த நாடு மிகவும் பின்தங்கியுள்ளது. மக்கள் தொகையில் இப்போது பெரும்பாலானவர்கள் முதியவர்களாக உள்ளனர்.

வேலை செய்யும் வயதில் உள்ளவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், அடுத்த சில ஆண்டுகளில் அந்த நாடு கடும் சிக்கலை எதிர்நோக்கும் அபாயம் உள்ளது. அங்கு பிறப்பு விகிதத்தைவிட இறப்பு விகிதமே அதிகமாக உள்ளது.

கடந்த ஆண்டு குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்திருந்ததாக பிப். 28 ஆம் தேதி அளித்துள்ள பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு 1.58 மில்லியன் இறப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், 8 லட்சம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளனர். 2008 ஆம் ஆண்டு 12.8 கோடியாக இருந்த ஜப்பானின் மக்கள் தொகை சமீபத்தில் 12.4 கோடியாக குறைந்துள்ளது. முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மக்கள்தொகை குறைந்துவருகிறது. குழந்தைகள் பிறப்பு விகிதமும் குறைந்து வருகிறது, இது கவலை அளிக்கும் விஷயமாகும்.

இதை சீர்செய்யாவிட்டால் சமூக சீர்குலைவு ஏற்பட்டு, தொழில் வளம் குறைந்து, பொருளாதாரமும் பலவீனமடைந்துவிடும். இது தொடர்ந்தால் நாட்டை காப்பாற்ற முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜப்பானில் 65 வயதுக்கு மேலானவர்கள் 30 சதவீதம் உள்ளனர். ஆனால், 15 வயதுக்கு உட்பட்டவர்கள் 15 சதவீதம் மட்டுமே உள்ளனர்.

இதனிடையே குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜப்பான் பிரதமர் பியூமியோ கிஷிடா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபகாலமாக குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு ஜப்பான் அரசு வலியுறுத்தி வருகிறது. அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வோருக்கு ரொக்கப் பரிசும், சலுகைகளும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், குழந்தைகளை வளர்க்க அதிகம் செலவிட வேண்டியிருப்பதால் பெற்றோர் தயக்கம் காட்டி வருவதாகத் தெரிகிறது.

மக்கள் தொகை குறைந்து வருவது குறித்து கவலை வெளியிட்ட பிரதமர் கிஷிடா, இப்போது மக்கள் தொகையை அதிகரிக்காவிட்டால் பின் எப்போதும் அதிகரிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது இதற்காக நீண்டநாள் காத்திருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிதாக திருமணம் செய்துகொள்பவர்கள் மற்றும் குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு மேலும் சில சலுகைகளை அளிக்கும் திட்டத்தை விரைவில் பிரதமர் அறிவிக்க இருக்கிறார்.

ஜப்பானை அடுத்து சீனா, தென்கொரியாவிலும் இப்போது மக்கள் தொகை குறைந்துவருகிறது. சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவாக 2022 இல் மக்கள் தொகை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT