நாட்டில் போலி செய்திகளை பரப்பியதாக 102 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
– இதுகுறித்து மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில தெரிவித்ததாவது:
நாட்டில் டிஜிட்டல் ஊடகங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தி, பொய் செய்திகளை பரப்பும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை மத்திய அரசு கொண்டுவந்தது.
இந்த சட்ட விதிகளின் கீழ் அத்துமீறி செயல்படும், யூடியூப், ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள கணக்குகளை அரசு முடக்கி வருகிறது. அதன்படி, கடந்த வாரம் 8 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கிய நிலையில், மொத்தம் 102 யூடியூப் சேனல்களை இதுவரை அரசு முடக்கியுள்ளது.
இந்த யூடியூப் சேனல்கள் மத ரீதியாக அவதூறு செய்திகளை பரப்பி நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டன. நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், இந்த யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டன.
–இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.