டெல்லியைச் சேர்ந்த 31 வயது நபருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் ஏற்கனவே 3 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இப்போது டெல்லியிலும் கன்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-இதுகுறித்து டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பாகத் தெரிவிக்கப் பட்டதாவது:
சமீபத்தில் மேற்கு டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப் பட்டுள்ளது. அவர் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மனாலி சென்று டெல்லி திரும்பிய பின்னர் உடல் நலம் பாதிக்கப் பட்டுள்ளார்.
மூன்று நாள்களுக்கு முன்னர் டெல்லி மவுலான ஆசாத் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.இவருக்கு குரங்கம்மை நோய்க்கான அறிகுறி தென்பட்ட நிலையில், மருத்துவமனை மாதிரிகளை எடுத்து புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தது. இந்த சோதனை முடிவில் இவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
–இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
உலக அளவில் இதுவரை 75 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த குரங்கம்மை நோயால் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குரங்கம்மை நோயை சர்வதேச அவசர நிலை பிரகடனமாக உலக சுகாதார அமைப்பு நேற்று அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்டை மாநிலமான கேரளாவில் இதுவரை மூன்று பேருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாடு எல்லைகளில் உஷார் நிலையில் கண்காணிப்பு பணிகள் நடைபெறுவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.