தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் பாஜகவின் முக்கியப் பிரமுகராகவும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் விளங்கும் நடிகை குஷ்பு, ‘நான் பாஜகவில் இருந்தாலும் தலைவர் கருணாநிதிதான் எனது அரசியல் ஆசான். அது எப்போதுமே மாறாது’ என்று கூறி இருக்கிறார். இது பாஜகவினரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகை குஷ்பூ கடந்த 2010ம் ஆண்டு பெரியார் மற்றும் கருணாநிதியின் மீது கொண்ட பற்றின் காரணமாக தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அதன் பிறகு சில காரணங்களால் திமுகவில் இருந்து விலகி, 2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அதன் பின்னர் அவர் பாஜகவில் இணைந்து தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருந்து வருகிறார். பாஜகவில் இருக்கும் குஷ்புவை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேபோல், நடிகை குஷ்பும் திமுகவினரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பூ, ‘’கலைஞர் அவர்கள்தான் என்றைக்குமே எனக்கு அரசியல் ஆசான். அவர் குறித்து பேச வேண்டுமென்றால் நான் நாள் முழுவதும் பேசிக்கொண்டே இருப்பேன். திமுகவில் இருந்து வந்தவள் நான். அதனால் அவர் குறித்து நன்றாகவே எனக்குத் தெரியும்'' என கூறி உள்ளார். திமுக ஊழல் கட்சி, குடும்ப ஆட்சி என பாஜகவின் அகில இந்திய தலைவர்கள் விமர்சனம் செய்து பேசி வரும் நிலையில், குஷ்புவின் இந்தப் பேச்சு, பாஜகவினர் மத்தியில் பெரும் குழப்பத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது.