கர்நாடகாவில் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான இலவச பயணத் திட்டத்தால், தங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பை சரிக்கட்ட வலியுறுத்தி, பெங்களூருவில் தனியார் பேருந்துகள் , கார்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி, வாக்குறுதி அளித்தபடியே மகளிருக்கு இலவச பேருந்து சேவையை அண்மையில் தொடங்கியது. இதனால் தனியார் பேருந்துகள், ஆட்டோக்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக உரிய முடிவெடுக்க அரசுக்கு தனியார் அமைப்புகள் கடந்த 31-ஆம் தேதி வரை கெடு விதித்திருந்தன. ஆனால், எந்த வகையான அறிவிப்புகளும் அரசு தரப்பில் வெளியாகவில்லை. இந்நிலையில், மாதம் 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 32 போக்குவரத்து அமைப்புகள் பெங்களூருவில் ஆட்டோ, கார்கள் மற்றும் தனியார் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டன.
இதனால், தலைநகர் பெங்களூருவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்றே பாதிக்கப்பட்டது. பெங்களூருவில் சில பள்ளிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டது.
பெங்களூருவில் போக்குவரத்து அமைப்புகளின் கோரிக்கைக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய கன்னட பாதுகாப்பு இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு பேரணியும் நடத்தப்பட்டது. அப்போது வேலைநிறுத்தத்தில் பங்கேற்காத ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, போக்குவரத்து அமைப்புகளின் 3 கோரிக்கைகளை தவிர பிற கோரிக்கைகளை ஏற்பதாக கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.