தமிழகத்தில் நாளை கார்த்திகை தீபத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில் நாளை பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப் பட்டதையடுத்து நாட்டில் பெரும் கலவர்ம் வெடித்தது. அதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ம் தேதி நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன.
இந்த ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப் படுவதால், கோவில்கல் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டுத் தலங்களில் போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நாளை நடைபெறும் தீபத் திருவிழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப் படுத்தப் பட்டுள்ளது. தமிழக டிஜிபி சைலேந்திர பாபு திருவண்ணாமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். அதேபோல், பழனி முருகன் கோவிலிலும் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. நாளை தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.