Twin Village 
செய்திகள்

இரட்டைக் கதிரே: இரட்டையர்கள் அதிகம் பிறக்கும் அதிசய கிராமம்!

பாரதி

ஒரு பள்ளியில் அதிகளவு இரட்டையர்கள் படித்தாலே ஆச்சர்யமாகப் பார்க்கும் இந்த உலகத்தில், ஒரு கிராமம் முழுவதும் ஏராளமான இரட்டையர்கள் பிறக்கிறார்கள் என்று சொன்னால், நம்பமுடிகிறதா?

இவ்வுலகில் பல விசித்திரமான கிராமங்களும் நகரங்களும் உள்ளன. கைவிட்டு எண்ண முடியாத அளவுக்கு அவ்வளவு ஆச்சர்யங்கள் இவ்வுலகில் இருக்கின்றன. அதை நாம் தெரிந்துக்கொள்ளும்போது, எப்படி இது சாத்தியம்? இது உண்மையே அல்ல என்று கூறிவிடுகிறோம். எப்போதும் இது கூறுவதற்கு முன்னர் ஒருமுறை நன்கு ஆராய்வது அவசியம். அதிசயத்தை அலட்சியம் செய்தால், பிறகு நாம் ரசனையில்லா பொம்மையாகிவிடுவோம்.

சரி இப்போது, நாம் இந்த இரட்டையர்கள் கிராமத்தைப் பற்றி பார்ப்போம்.

இந்த அற்புத கிராமத்தைக் காண நாம் உலகெங்கும் அழையத் தேவையில்லை. ஏனெனில், இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில்தான் இந்த கிராமம் உள்ளது. ஆம்! கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கோதினி என்ற கிராமம்தான் அது. இந்த கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அதில் மொத்தம் தற்போது 400 இரட்டையர்கள் இருக்கிறார்கள். அதாவது 800 பேர்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இந்த கிராமத்தில் பிறந்து வெளிநாடுகளில் திருமணம் செய்துக்கொண்டு வசித்தாலும் அவர்களுக்கும் ஒரு இரட்டையராவது பிறந்துவிடுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு இரட்டையராவது இருக்க வேண்டும் என்பது இயற்கையின் விதிபோல். இந்த விஷயம் வெளியில் பரவியவுடன், புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்களெல்லாம் அங்கு சென்று ஆராய்ச்சி செய்து பார்த்தனர். முதலில் அவர்களின் DNA சோதிக்கப்பட்டது.

எந்த தனிப்பட்ட மாற்றமும் இல்லை என்பதால், பின்னர் ரத்த பரிசோதனை செய்துப் பார்க்கப்பட்டது. ஏனெனில், உணவு முறைகள் காரணமாக இவ்வாறு இருக்கலாம் என்று எண்ணினர். ஆனால், அதிலும் எந்த வித்தியாசமும் இல்லை. ஒருவேளை அவர்கள் வாழும் சுற்றுச்சூழல் மற்றும் குடிநீர் காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கணிக்கின்றனர். ஆனால், இதுதான் காரணம் என்று அழுத்தமாக இன்றுவரை சொல்லமுடியவில்லை. இது கடவுளின் பிரசாதம் என்று அந்த மக்கள் நம்புகின்றனர். கோதினியில் இரட்டையர்கள் அதிக அளவில் இருப்பதற்கு பரம்பரை ஜீன்தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

தெற்கு வியட்நாமில் உள்ள ஹுங் ஹியெப்ஃப்ரம் (Hung Hiepfrom) என்ற பகுதியிலும் நைஜீரியாவில் உள்ள இக்போ ஒ​ரா (Igbo-Ora) என்ற பகுதியிலும் பிரேசிலில் உள்ள கான்டிடோ கோடோய் (Cándido Godói) என்ற பகுதியிலும் நிறைய இரட்டையர்கள் பிறந்திருக்கிறார்கள். இதற்கான அறிவியல் பின்னணியையும் ஒரு குழு ஆராய்ச்சி செய்திருக்கிறது. அதில் இக்பா ஓராவில் வசிக்கும் பெண்களுக்கு அதிக இரட்டையர்கள் பிறப்பதற்கு அவர்களது உணவுப் பழக்கம் காரணம் என்று கண்டறிந்திருக்கிறார்கள். அதாவது உள்ளூரில் விளையும் ஒரு குறிப்பிட்ட கிழங்கை அவர்கள் அதிகம் சாப்பிடுகிறார்களாம்.

இந்த கிராமத்தில் பிறக்கும் அனைத்து இரட்டையர்களும் எந்த குறைப்பாடுமின்றியும் பிறக்கிறார்கள். அதேபோல் தாய்மார்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எதுவாயினும் சரி, இரட்டை இரட்டையாக பார்க்கும்போது கண்களுக்கு எவ்வளவு குளிர்ச்சியாக இருக்கும். நேரம் இருக்கும்போது ஒரு எட்டு பார்த்துவிட்டு வாருங்களேன், அந்த அதிசய கிராமத்தை.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT