இந்தியாவில் உயிருடன் இருப்போர் உறுப்பு தானம் செய்வது எண்பது (80%) சதவீதம் உயர்ந்துள்ளது. இது கல்லீரல் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு வேகமாக அதிகரித்து வருவதன் பலன் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடல் உள்ளுறுப்புகளில் மீண்டும் வளரும் தன்மை கொண்ட கல்லீரல், பிற உள்ளுறுப்புகளின் இயக்க வியலுக்கான அச்சாணியாக இருக்கிறது. அத்தகைய கல்லீரலில் பாதிப்பு ஏற்படும்போது, மூளைச் சாவு அல்லது விபத்தில் இறந்தவர்களின் உறுப்பைப் பெற முன் பதிவு செய்வது கட்டாயமாகும் என்றாலும் கூட, அதற்கு அதிகபட்சம் 15 மாதம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. தற்போது உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் உயிருடன் இருக்கும் குடும்ப உறுப்பினர்களே கல்லீரல் தானம் செய்ய முன்வருகின்றனர். இந்த வகையிலான கல்லீரல் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை மிகவும் பாதுகாப்பானதென்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
சிறுநீரகத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவில் தற்போது ஆண்டுக்கு 2000 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. அதில் உயிருடன் இருப்போர் உறுப்பு தானம் செய்வது மேலை நாடுகளை விட இந்தியாவில் மிக அதிகம் என்பது புதிய தகவலாகும். 18 வயது முதல் 55 வயது வரையுள்ள சொந்த குடும்ப உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் நோயாளிக்கு கல்லீரல் தானம் செய்யலாம். கல்லீரலில் அதிகபட்சம் 6 சதவீதம் அளவுக்கு வெட்டி எடுக்கப்பட்டு நோயாளிக்கு பொருத்தப்படும்.
கல்லீரல் செயலிழப்பான நபரை சரியான நேரத்தில் பரிசோதனை செய்து கண்டறிந்து, அவருக்கான Living Donor Liver Transplant உடனடியாக செய்யப்பட்டால், இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை நாம் காப்பாற்றலாம்.
வெட்டப்பட்ட கல்லீரல் ஆறு வாரங்களில் முழுமையான வளர்ச்சியை எட்டிவிடும். இதனால் கல்லீரலைக் கொடுப்பவருக்கோ பெறுபவருக்கோ எவ்வித பிரச்சனையும் ஏற்படாது. கல்லீரல் தானம் செய்தவர்கள் மூன்று வாரங்கள் மட்டும் ஓய்வு எடுத்தாலே போதும். அதற்காக வாழ்நாள் முழுவதும் எவ்விதமான மருந்துகளையும் அவர்கள் சாப்பிட வேண்டாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
மறுபுறம் கல்லீரல் புற்றுநோயை விட Fatty Liver எனப்படும் கொழுப்பு மிக்க கல்லீரல் பிரச்சினை மிக மோசமானது எனவும் இது சார்ந்த விழிப்புணர்வையும் மக்களுக்கு அதிகம் ஏற்படுத்த வேண்டும் எனவும் மருத்துவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.