சென்னையில் என்ஐஏ அதிகாரி என கூறி கோவை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்தவுள்ளதாக ஏமாற்றி 20 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக சென்னை பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்திவரும் ஜமால் என்பவர் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் 6 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
சென்னை பர்மா பஜாரில் ஜமால் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த டிசம்பர் 13ம் தேதி அவரது வீட்டிற்கு வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், தங்களை என்ஐஏ அதிகாரிகள் என தெரிவித்துள்ளனர்.
மேலும், கோவை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்தவுள்ளதாக கூறி, வீட்டில் இருந்து 20 லட்சம் ரூபாயை எடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஜமாலின் வீட்டிலிருந்து 20 லட்ச ரூபாயை எடுத்துச் சென்றது போலி என்ஐஏ அதிகாரிகள் என்பது தெரியவந்தது. மேலும் கொள்ளையில் ஈடுபட்டது, ராயபுரத்தை சேர்ந்த வேலு மற்றும் அவரின் கூட்டாளிகள் என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து, தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில், கொள்ளையர்கள் திடீரென ஜார்ஜ் டவுன் நீதி மன்றத்தில் சரணைடைந்தனர். வழக்கில் முக்கிய திருப்பமாக, 20 லட்சம் ரூபாயை கொள்ளையடித்ததாக புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், 2 கோடி ரூபாய் கொள்ளையடித்தாக கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒண்ணுமே புரியலை இந்த உலகத்திலே என போலீசார் புலம்பி வருகின்றனர். ஆனால் இச்சம்பவம் தொடர்பாக போலீசாரால் தீவிர விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது