காலையில் எழுந்ததும் நம் காதுகளில் ஒலிக்கும் ஒற்றை மைனாவின் குக்கூ ராகம் அன்றைய நம் நாளினை உற்சாகமாக கழிக்க உதவுகிறது. மலர்களில் உள்ள தேனை உறிஞ்சும் வண்ணத்துப்பூச்சி முதல் நம் வைக்கும் சோறு சாப்பிட வரும் காகம் குருவி வரை நாம் ரசிக்கும் பறவைகள் அநேகம். பார்வைக் கூர்மைக்கு கழுகு, காலை அலாரத்துக்கு சேவல், அழகை ரசிக்க கிளிகள், சமாதானத்துக்கு அழகிய புறாக்கள் என அன்றாடம் பல பறவையினங்கள் நம்மோடு வாழ்ந்து வருகிறது.
பறவைகளால் பூமியில் விழும் விதைகள் மூலம் வளரும் விருட்சங்கள் நம்மை வெப்பத்திலிருந்து காத்து ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படையாகிறது. இப்படி சுற்று சூழலுக்கு பெரும் நன்மைகளை செய்யும் பறவைகளுக்கு நாம் நன்றி தெரிவிக்கும் தினமாக இன்று (05-01-2023) தேசிய பறவைகள் தினம் கொண்டாடப் படுகிறது. இயற்கை ஆர்வலர்கள் பறவை ஆராய்ச்சி யாளர்கள் சூழலியலாளர்கள் இவர்களுடன் நாமும் பறவை களுக்கான இந்த தினத்தில் சில செய்திகளை அறிந்து பறவைகளை கவுரவிப்போம்.
1894 ஆம் ஆண்டு பென்சில்வேனியாவைச் சேர்ந்த அரசு அதிகாரியான சார்லஸ் அல்மான்சோ பாப்காக் என்பவர் பறவைகளைக் கொண்டாடும் விதமாக விடுமுறை அறிவித்த நாள் இன்று. அப்போது முதல் இந்த நாளையே தேசிய பறவைகள் தினமாக அமெரிக்காவிலும் மற்றும் உலகம் முழுக்க கொண்டாடி வருவதாக சில பதிவுகளும் 2002 ஆம் ஆண்டு முதலே அமெரிக்காவில் இந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக வேறு பதிவுகளும் சொல்கிறது. இத்தினம் எப்போது என்று யாரால் தோன்றியது என்பதற்கு அப்பாற்பட்டு பறவைகளைப் புரிந்து அதைக் காக்கும் நோக்கம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானதே.
வெளிநாடுகளில் வசிக்கும் பறவை விரும்பிகள் இந்த நாளில் பறவைகளின் வசிப்பிடத்துக்கு கூட்டமாக சென்று பறவைகளை கண்டு அவற்றுக்கு உணவு தந்து மகிழ் வார்கள். தற்போது நம் நாட்டிலும் பறவைகள் குறித்த விழிப்புணர்வு பெருகி வருவதால் ஆர்வலர்களும் பள்ளி ஆசிரியர்களும் பறவைகள் பற்றிய புரிதலை மக்களிடமும் இளையவர்களிடமும் கொண்டு சேர்த்து வருவது பாராட்டுக்குரியது.
இதுவரை பத்தாயிரத்துக்கும் மேல் உலகில் பறவையினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள். பறவைகள் பெரும்பாலும் இரை தேடியும் அவற்றை உண்ணவுமே தன் வாழ்நாளில் பெரும்பகுதி நேரங்களை கழிக்கிறது. இறக்கைகளுடன் இவைகள் நீண்ட தூரம் பறக்கும் வலிமை பெற்றது. மெலிதான இறகுகள் கொண்ட சிறு பறவைகள் என்றாலும் பறப்பதற்கு ஏதுவாக அதன் சிறகு அமைப்புகளும் சிறு எலும்புகளும் உள்ளதால் அவற்றினால் பறந்து செல்ல முடிகிறது. இதிலும் பறக்க முடியாத நிலையில் உள்ள பறவைகளையும் தீவு போன்ற பகுதிகளில் காணலாம். இரைக்காக இடம் பெயர்தலிலும் பறவைகளுக்கே முன்னுரிமை. இரைக்காக தன் நாட்டை விட்டு வேறு நாட்டுக்கு வந்து குறிப்பிட்ட காலம் வரை வசித்து பின் சரியாக தன்நாட்டுக்குத் திரும்பும் பறவைகளின் நினைவாற்றல் வியக்க வைக்கும். இதனால்தான் அப்போது முதல் இன்று வரை புறாக்களை செய்தியாளர்களாக பயன்படுத்தி வருகிறோம்.
பறவைகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் இயல்பு கொண்டவை. தனக்கென தானே அமைத்துக்கொள்ளும் கூடுகளில் பறவைகள் குஞ்சுகளைப் பொறித்துப் பாதுகாக்கிறது. குஞ்சுப் பறவைகள் சற்று வளர்ந்ததும் கூட்டை விட்டு சுதந்திரமாக் பறந்து தானே தனக்கான இரையைத் தேடி வாழ்வைத் துவங்குகிறது. மனிதர்களாகிய நாம்தான் இன்னும் நம் வாரிசுகளை தன்னிச்சையாக இயங்குவதை தடுத்து வருகிறோம்.
பறவைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் அழிந்து வரும் பறவை இனங்களைக் கண்டறிந்து மீதமிருப்பவைகளை காப்பாற்றியும் பறவைகளுக்கான வாழ்விடத்தை மனிதர்களாகிய நாம் அழித்துவிடாமலும் இருப்பதுதான் இந்த காலத்தில் மிக அவசியமாகிறது. இந்த பறவைகள் தினத்தில் நம்மை அண்டி வரும் பறவைகளை துன்புறுத்தாமல் அவற்றின் சிறப்புகளை நம் பிள்ளைகளுக்கு எடுத்துக்கூறி அவற்றைப் பாதுகாத்தோமானால் வரும் காலம் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான வாழ்வுக்கு சிறப்பு.