பிரதமர் நரேந்திர மோடியை ராவணனுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தில் 182 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2 கட்டமாக டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் டிசம்பர் மாதம் 8-ம் தேதி அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் முதல்கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு ஆளுங்கட்சியான பாஜகவுக்கும் மற்றும் காங்கிரஸ், ஆம் ஆத்மிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது, பிரதமர் மோடிக்கு ராவணன் போல 100 தலையா உள்ளது என்று பேச, அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து அவர் பேசும்போது, ‘’மாநகராட்சி தேர்தலில், எம்எல்ஏ தேர்தல், எம்.பி தேர்தல் என்று அனைத்து இடங்களிலும் மோடியின் முகம்தான் உள்ளது.
ராவணன் போல், உங்களுக்கு 100 தலைகள் உள்ளதா? சட்டசபை, மாநகராட்சி, நகராட்சி தேர்தல் என அனைத்திலும் மோடியின் பெயரில் ஓட்டு கேட்கப்படுவதை நான் பார்க்கிறேன்.
வேட்பாளர்கள் பெயரில் ஓட்டு கேளுங்கள். நகராட்சியில், மோடி வந்து உங்களுக்கு பணி செய்ய போகிறாரா? உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் அவர் வருவாரா?’’ என்று மல்லிகார்ஜூன கார்கே காட்டமாகப் பேசினார்.