அதிக அதிர்ஷ்டம் ஆபத்தை விளைவிக்கும் என்று கூறுவார்கள். லாட்டரியில் கிடைத்த பரிசுத் தொகையே, அதை வென்றவருடைய மரணத்திற்குக் காரணமாக அமைந்துள்ள நிகழ்வைப் பற்றிய செய்திதரன் இது.
கேரள மாநிலம் திருமண கோபுரம் பாங்கோடு சேர்ந்தவர் சஜீவ். இவர் வீட்டில் இருந்து தவறி விழுந்ததாகக்கூறப்படும் தலையில் பலத்த காயங்களுடன் கடந்த இரண்டாம் தேதி திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மறுநாளே அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது, பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.
35 வயதான சஜீவுக்கு சமீபத்தில் லாட்டரி சீட்டில் 80 லட்சம் ரூபாய் பரிசு விழுந்துள்ளது. அந்த பரிசுத்தொகை சில நாட்களுக்கு முன்பு சஜிவின் வங்கி கணக்கிற்கு வந்துள்ளது. இதனால் உற்சாகத்தில் திளைத்த அவர் இந்த பணத்தில் குறிப்பிட்ட தொகையை செலவிட்டு நண்பர்களுக்கு மதுவிருந்து வைப்பதற்கு முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த ஒன்றாம் தேதி இரவு பாங்கோடு சாந்தகுடியில் உள்ள நண்பர் ராஜேந்திரன் என்பவர் வீட்டில் நண்பர்கள் ஒன்று கூடி மது அருந்தியுள்ளனர்.
போதை தலைக்கேறிய நிலையில் நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சந்தோஷ் என்ற இளைஞர் சஜீவைப் பிடித்துத் தள்ளியதில் நிலை தடுமாறி வீட்டின் மாடியிலிருந்து அருகிலுள்ள ரப்பர் தோட்டத்தில் விழுந்துள்ளார் சஜீவ். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவரை சக நண்பர்கள் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதேசமயம் மது விருந்தின்போது லாட்டரி பணத்தைக் கேட்டு நண்பர்கள் கொலை செய்தார்களா என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சஜீவின் மரணத்தில் உள்ள மர்மத்திற்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லாட்டரியில் 80 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை கிடைத்ததால் சஜீவுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி சில நாட்களிலேயே முடிவுக்கு வந்துவிட்டது.
ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்காக இந்த பணத்தை பயன்படுத்தியிருந்தால் சஜீவுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.