மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக இரண்டு இன மக்களிடையே பெரும் கலவரம் நடைபெற்று வந்தது. இந்தக் கலவரத்தில் பல உயிர்ச் சேதங்களும், ஏராளமான பொருட் சேதங்களும் ஏற்பட்டன. இந்த இனக் கலவரத்தில் கடந்த 3ம் தேதி இரண்டு பழங்குடி இனப் பெண்கள் ஆடைகள் இன்றி இழுத்துச் செல்லப்பட்ட இரண்டு பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோ சில வாரங்களுக்கு முன்பு இணைய தளத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இந்த பாலியல் வன்கொடுமை குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து சில கருத்துக்களைக் கூறி இருந்தது. அது மட்டுமின்றி, மணிப்பூர் மாநில அரசு மற்றும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது. இந்த விவகாரம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுவதாகவும், வழக்கின் விசாரணையை மணிப்பூர் மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரியும் மத்திய அரசு கோரியிருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதால் அன்றைய தினம் இந்த விசாரணை நடைபெறவில்லை.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இதற்கிடையில், மணிப்பூர் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஒன்று செய்யப்பட்டு இருக்கிறது. அந்த மனுவில், “இந்த விவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து வெளிப்படையான மற்றும் விரிவான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டு உள்ளது. அதேபோல், இந்த வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட தங்களது அடையாளங்களை வெளியிடாமல், பாதுகாக்க உத்தரவிட கோரியும் அந்தப் பெண்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது.