சிக்கிம் மாநில தலைநகர் காங்டாங் மற்றும் நாதுலா கணவாய் இடையே ஜவர்ஹர்லால் நேரு சாலையில் 15வது மைல் பகுதியில் இன்று பிற்பகல் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இந்தப் பனிச்சரிவில் 150க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கினர். இதனையடுத்து பனிச்சரிவில் சிக்கிய சுற்றுலா பயணிகளை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில் இந்த பனிச்சரிவில் சிக்கி ஒரு குழந்தை உள்ளிட்ட ஆண்கள், பெண்கள் என ஏழு பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பலர் மீட்கப்பட்டு எஸ்டிஎன்எம் மருத்துவமனை மற்றும் சிஆர்ஹெச் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர். சிக்கிம் மாநில போலீசார், சிக்கிம் டிராவல் ஏஜெண்டுகள் சங்கம், சுற்றுலாத்துறை அதிகாரிகள், வாகன ஓட்டுநர்களே இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பின்னர் ராணுவமும் இந்த மீட்புப் பணியில் தற்போது இணைந்துள்ளது.
இது குறித்து சிக்கிம் காவல்துறை உயர் அதிகாரி சோனம் டென்சிங் பூட்டியா கூறுகையில், ’பனிச்சரிவு இருப்பதால் 13வது மைல் வரை செல்லத்தான் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், சுற்றுலாப் பயணிகள் 15வது மைல் பகுதி வரை சென்றதால் இந்த கடும் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர்’ என்றார்.
இதனைத் தொடர்ந்து பேரிடர் மீட்புப் படையினர் தற்போது சிக்கிம் காங்டாங்-நாதுலா இடையே பனிச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய நிலையில் 7 பேர் உயிரிழந்து உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 22 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த பனிச்சரிவில் சிக்கியுள்ள பலரையும் தேடும் பணி தொடர்ந்து வருகிறது. இறப்பு எண்ணிக்கை இன்னும் அஞ்சப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர்தான் சிக்கிம் மாநில சாங்கு ஏரி பகுதியில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் சிக்கிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.