செய்திகள்

வடமாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு கடந்த 24 மணிநேரத்தில் 19 பேர் பலி!

ஜெ.ராகவன்

டமாநிலங்களில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இமாச்சல மாநிலத்தில் மழைவெள்ளத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மழைக்கு 19 பேர் உயிரிழந்த்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இமாச்சலம், உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியாணா, ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், தில்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இமாச்சல மாநிலம், உத்தரகண்ட் மாநிலங்களில் பல பகுதிகளில் நதிகள் கரைபுரண்டு ஓடுகின்றன. ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. தில்லியில் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ள நீர்புகுந்துள்ளது மழை வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் விடியோவாக வெளியிடப்பட்டுள்ளன.

இமாச்சல் மாநிலத்தில் தொடர் மழைக்கு 6 பேர் பலியாகியுள்ளனர். சிம்லா மாவட்டம் மதோலி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர்உயிரிழந்துள்ளர். குல்லு மாவட்டத்தில் லங்கா பேகர் கிராமத்தில் நிலச்சரிவில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்துள்ளார். சம்பா மாவட்டத்தில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் இறந்த்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இமாச்சலத்தில் நிலச்சரிவு, திடீர் வெள்ளம் மற்றும் தொடர் மழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மணாலி, குல்லு, கின்னாவுர், சம்பா ஆகிய இடங்களில் நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நிலச்சரிவு காரணமாக 730 சாலைகள் மூடப்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தால் மாநிலத்தில் ரூ.365 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் மழை, வெள்ளம் காரணமாக மட்டும் 54 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்திலும் மழை, வெள்ளத்தால் நிலைமை மோசமாக உள்ளது. அங்குள்ள நதிகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது. ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் குலார் என்னுமிடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. யாத்ரீகர்கள் சென்ற கார் ஒன்று கங்கை நதியில் அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து அதில் பயணம் செய்த மூவரை காணவில்லை.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். எனினும் மூன்று நாட்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியுள்ளது.

குர்கான் மற்றும் தில்லியில் பலத்த மழை காரணமாக பல இடங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடி வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளன.ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியாணாவிலும் பலத்த மழையால் தாழ்வான இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Nayanthara - Beyond the fairy tale - "நான் அந்த ரிலேஷன்ஷிப்ல இருந்தது உண்மைதான்!" நயன்தாரா வெளிப்படை (or) வெளிப்படையான ஆவணப்படம்!

மூலநோய்க்கு முடிவு கட்ட என்ன செய்ய வேண்டும்?

இரவில் பூத்து, காலையில் உதிரும் தெய்வீக நறுமணம் கொண்ட பிரம்ம கமலம்!

கணவன் மனைவி இந்த 7 விஷயங்களில் வெளிப்படையாக இருக்க வேண்டும்! 

ஆந்திரப் பிரதேசத்தின் புவிசார் குறியீடு பெற்ற பாரம்பரிய இனிப்பு ஆத்ரேயபுரம் பூதரெகுலு!

SCROLL FOR NEXT