பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியிருக்கிறது. சமீபத்தில் பொதுத்தேர்வுகள் வெளியான நாளன்று தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தது. மாணவர்களை தொடர்பு கொண்ட மன நல ஆலோசகர்கள், தேர்வு முடிவுகள் குறித்த மாணவர்களின் எண்ணவோட்டங்களை அறிந்து, ஆலோசனை வழங்கினார்கள்.
பொதுத் தேர்வுகள் மட்டுமல்லாத போட்டித் தேர்வுகளுக்கும் மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 7ம் தேதி நாடு முழுவதும் நீட் போட்டித் தேர்வு நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் 20 லட்சம் மாணவர்கள் பங்கேற்று, தேர்வு எழுதினார்கள். இதில் ஒன்றரை லட்சம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
நீட் தேர்வு ரத்து, விலக்கு என்றெல்லாம் சொல்லி அரசியல்வாதிகள் குழப்பி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே நீட் தேர்வு குறித்த பயம், கவலையில் மாணவர்கள் ஆட்பட்டிருந்தார்கள். தமிழகத்தில் நீட் தேர்வு ரத்தாகிவிடும் என்கிற நம்பிக்கையூட்டி வந்த காரணத்தால் ஆரம்பத்தில் தேர்வை மாணவர்கள் அலட்சியமாகவே அணுகி வந்தார்கள்.
கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வை தவிர்க்க முடியாது என்பதை புரிந்து கொண்டதும் நிலைமை மாறி வருகிறது. ஆனாலும், தேர்வு பயத்தினால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து வருகிறது. சென்ற வாரம் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் செல்வன் தனுஷ், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி செல்வி கனிமொழி, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி சௌந்தர்யா, திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளியைச் சேர்ந்த மாணவர் பரமேஸ்வரன் என பட்டியல் நீள்கிறது.
நீட் தேர்வை எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்திருக்கிறார். நீட் தேர்வு எழுதியுள்ள அனைத்து மாணவர்களையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனை வழங்கும் நடவடிக்கை அடுத்து வரும் சில வாரங்களுக்கு தொடர இருக்கிறது.
மாணவர்களுக்கு மட்டுமல்லாது பெற்றோர்களையும் மனநல மருத்துவர்கள் தொடர்பு கொள்ள திட்டமிடப்பட்டிருக்கிறது. மாவட்ட வாரியாக நீட் தேர்வு எழுதியவர்களின் பட்டியலைப் பெற்று, ஆட்சியல் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. நல்ல திட்டம்தான்!