சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடி மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் இன்று அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தமிழகம் முழுவதும் 28 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. இன்று வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
நேற்றே பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை குறித்து, அந்தந்த மாவட்ட அதிகாரிகள் முடிவெடுத்து கொள்ளலாம் என தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தமிழகம் முழுவதும் 28 மாவட்டங்களில் விடுமுறை அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையமாக வலுப்பெற்றிருப்பதால் தமிழகத்தில் இன்றும் , நாளையும் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை அருகே வங்கக்கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதனால் நேற்று காலை முதலாகவே தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில், நேற்று மாலையில் இருந்து கனமழை கொட்டித் தீர்க்க தொடங்கியது.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இப்போது வரை கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையால் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நாகை, தஞ்சாவூர், வேலூர் மாவட்டங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. அங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.