திமுக கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது வாக்குறுதியாக மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த நிலையில் மதுரை மற்றும் கோவை நகரங்களில் மெட்ரோ பணியை மேற்கொள்வதற்கான விரிவான திட்ட அறிக்கையை மெட்ரோ நிர்வாகம் தமிழக அரசிடம் தற்போது வழங்கியுள்ளது.
சென்னையில் இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் பணி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் மதுரை மற்றும் கோவை நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது சம்பந்தமான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து திட்ட அறிக்கை சமர்ப்பிக்க ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனத்திடம் பணி வழங்கப்பட்டது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான சாத்திய கூறுகளை அறிக்கையாக தமிழக அரசிடம் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக மார்ச் 28ஆம் தேதி விரிவான திட்ட அறிக்கைக்கான பணி தொடங்கப்பட்டது.
மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கிலோமீட்டர் தொலைவிற்கு மெட்ரோ பாதையை அமைப்பது சம்பந்தமான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 8,500 கோடி ரூபாய் நிதி அரசிடமிருந்து கோரப்பட்டுள்ளது. கோவையில் 139 கிலோமீட்டர் தொலைவுக்கு 3 கட்டங்களாக மெட்ரோ ரயில் பாதை அமைப்பு சம்பந்தமாக திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக அவிநாசி சாலையில் இருந்து கருமாத்தம்பட்டி வரையிலும், உக்கடம் பகுதியில் இருந்து சத்தியமங்கலம் வரையிலும் 39 கிலோமீட்டர் தொலைவிற்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசிடம் தற்போது வழங்கப்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக்கிய உடன் பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.