செய்திகள்

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை 20 மணி நேரத்திற்கு பிறகு துவங்கியது!

கல்கி டெஸ்க்

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை 20 மணி நேரத்திற்கு பிறகு தற்போது வழக்கம் போல் இயக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ வழித்தடத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக பல ரயில்கள் நிறுத்தப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் சேவையை நாள்தோறும் ஒரு லட்சம் பேர் வரையில் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். இந்நிலையில் நேற்று காலை பணிக்கு சென்ற பலர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயிலில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னையில் தற்போது விமான நிலையம்-விம்கோ நகர் வரையும், பரங்கிமலை-சென்ட்ரல் வரையும் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. பணிக்கு செல்லும் பயணிகளுக்கு மிக வசதியாகவும் விரைவாகவும் பயணிக்க பெரிதும் உதவி வருகிறது.

இத்தகைய சூழலில், நேற்று காலை 8 மணி அளவில் சென்டிரல் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவையில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அனைத்து மெட்ரோ ரயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டது. பின்னர், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

metro

இதனால், சென்டிரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை மட்டுமே ரெயில்கள் இயக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சென்டிரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி மாறி கோயம்பேடு, ஷெனாய் நகர் வழியாக சென்டிரல் நிலையத்திற்கு சென்றனர்.

இந்த வழித்தடத்தில் 30 நிமிடத்துக்கு ஒரு ரயில் என்ற அடிப்படையிலேயே இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில், தொழில்நுட்பக்கோளாறு இன்று அதிகாலையில் சரிசெய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 20 மணி நேரத்திற்கு பிறகு தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

6 ரூபாயில் குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம்: முழு விவரம் உள்ளே!

சரும நோய்களைப் போக்கும் சிறந்த நிவாரணி புங்கம்!

பாவங்களைப் போக்கும் பர்வதமலை மல்லிகார்ஜுனேஸ்வரர்!

மாம்பழ சுவையில் மதி மயங்கி உடல் ஆரோக்கியத்தை மறவாதீர்!

தென்கொரியாவில் உண்ணப்படும் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ் வகைகள்!

SCROLL FOR NEXT