நாட்டின் போக்குவரத்தை எளிமைப்படுத்தும் விதத்தில் மெட்ரோ ரயில் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னையில் மிக சிறப்பாக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற நாட்டின் முக்கிய பெரு நகரங்களில் ஏற்கெனவே மெட்ரோ ரயில் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
1980-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே சென்னையின் நகர மையத்தை இணைக்கும் விதமாக ஒரு இருப்பு பாதையை அமைக்க அரசாங்கம் ஆலோசித்தது. 1985-ஆம் ஆண்டில் பறக்கும் ரயில் திட்டத்திற்கு முறையான திட்டமிடல் செய்யப்பட்டு, 1991-ஆம் ஆண்டு அதன் கட்டுமானம் தொடங்கப்பட்டது. முதல் கட்ட பணியானது மிகுந்த கால தாமதத்திற்குப்பின் 1997-ஆம் ஆண்டு பொது பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது. இரண்டாம் கட்ட பணியானது 2007-ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
சென்னையை போலவே மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படவுள்ளது. விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யும் பணியை மெட்ரோ நிர்வாகம் தற்போது தொடங்கியுள்ளது.மெட்ரோ ரயில் சேவை பிரிவுகளில் ஒன்றான MRTS என அழைக்கப்படும் பறக்கும் ரயில் திட்டத்தை மதுரையில் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை ஒத்தக்கடையில் இருந்து திருமங்கலம் வரை 31 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயிலை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழ்நாடு அரசிடம் ஏற்கனவே சமர்பிக்கப்பட்டுள்ளது. மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக வரும் பட்ஜெட்டில் ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரையில் MRTS குறித்து விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்த புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் இறுதியில் தாக்கல் செய்யப்படவிருக்கும் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு இருக்கும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.