தமிழகத்தில் தனியார் பாலின் விலை லிட்டருக்கு ரூ 2 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தனியார் பால் நிறுவனங்கள் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ஒரு முறை பால் விலையை உயர்த்தி உள்ளன. கடந்த ஆண்டு 4 முறை தனியார் பால் விலை உயர்த்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்க்கு காரணமாக பால் கொள்முதல் விலை மற்றும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் பால் விலையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தின் மூலம் ஆவின் பால் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுபட்டு உள்ளன. ஆவின் பாலிற்கும், தனியார் பாலிற்கும் லிட்டருக்கு ரூ.20 வரை வித்தியாசம் இருந்து வருவதால் ஆவின் பால் கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுகிறது. ஆவின் பால்க்கும் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
இந்த நிலையில் தான் இந்த நிறுவனங்கள் பால், தயிர் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது பொது மக்களிடையே கேள்வியினை எழுப்பியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து தனியார் பால் நிறுவனங்கள் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பி உள்ளது. பால் கொள்முதல் விலை மற்றும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் பால் விலையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
அதன்படி தனியார் பால் விலை 3 வகையாக பிரித்து உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ரூ.50-ல் இருந்து ரூ.52 ஆக உயருகிறது.
இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் ரூ.48-ல் இருந்து ரூ.50 ஆகவும் நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.62-ல் இருந்து ரூ.64 ஆகவும் உயர்கிறது.
ஆவினில் இந்த பால் பாக்கெட் லிட்டர் ரூ.44-க்கு விற்கப்படுகிறது. நிறை கொழுப்பு பால் ரூ.70-ல் இருந்து ரூ.72 ஆக அதிகரிக்கிறது.
ஆவினில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் லிட்டர் ரூ.60 என விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல தயிர் லிட்டர் ரூ.72-ல் இருந்து ரூ.74 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விலையேற்றம் இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.