சென்னை மற்றும் விழுப்புரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடுகள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை மேற்கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை திடீர் சோதனை மேற்கொண்டிருக்கின்றனர். ஏற்கெனவே, தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி திடீர் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அன்றிரவே அவரைக் கைதுசெய்தனர்.
கவுதம சிகாமணி ரிசர்வ் வங்கியின் ஒப்புதலின்றி 2008 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்தாவில் உள்ள பிடி எக்செல் மெகிண்டோ என்னும் நிறுவனத்தில் சட்டவிரோதமாக ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களுக்குப் பங்குகளை வாங்கி முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், ஐக்கிய அரபு நாடுகளின் நிறுவனம் ஒன்றில் 55 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அவர் முதலீடு செய்ததாகவும் கூறப்படுகிறது. 2008இல் நடந்ததாக சொல்லப்படும் இந்த மோசடி வழக்கின் போது திமுக ஆட்சியின் இருந்தது. பொன்முடி மாநில உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக கவுதம சிகாமணியின் ரூ. 8.60 கோடி மதிப்புள்ள சொத்துகளை கடந்த 2020ல் அமலாக்கத் துறை முடக்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் பொன்முடி மற்றும் அவரது மகனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.