கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டறிந்து, அவர்களை தண்டிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும், தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும் வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து இருக்கிறார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் என்று அந்தக் கட்சி சார்பில் வெளியான அறிக்கை ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இன்று புதுக்கோட்டையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி, “கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். எந்த உயர் பதவியில் இருந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கொடநாடு விவகாரத்தில் பலர் தற்கொலை செய்துகொண்டு உள்ளனர். ‘இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்துவோம்’ என்று திமுக தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தேர்தல் அறிக்கையில் கூறி இருப்பதை செய்கின்றபோது, யாரும் கோபப்படுவதில் நியாயம் இல்லை. அதுமட்டுமின்றி, ‘இது பழிவாங்கும் போக்கு’ என்று கூறுவதும் ஏற்புடையது அல்ல. எனவே, யாரையும் அச்சுறுத்துவதற்கோ, மிரட்டுவதற்கோ கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஆயுதமாக நாங்கள் பயன்படுத்தவில்லை” என்று அமைச்சர் ரகுபதி கூறி இருக்கிறார்.