பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஜனநாயகம் பற்றி அடிக்கடி பேசுகிறதே தவிர அதன்படி நடப்பதில்லை என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டினார்.
அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளிலிருந்து கவனத்தை திசைத்திருப்பவே நாடாளுமன்ற முடக்க நாடகத்தை அரசு நடத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்ற வளாகத்திலிருந்து விஜய் செளக் வரை மூவர்ணக் கொடியேந்திய பேரணியை நடத்தி முடித்தபின் எதிர்க்கட்சிகள் சார்பிலான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:
பட்ஜெட் கூட்டத்தை நடத்தவிடாமல் செய்வதே மத்திய அரசின் நோக்கமாகும்.
மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு ஜனநாயகம் பற்றி அடிக்கடி பேசுகிறது. ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதில்லை. ஆனால், எதிர்க் கட்சிகள்தான் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காக்க போராடி வருகிறது.
ரூ.50 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட் (நிதிநிலை அறிக்கை) விவாதிக்கப்படாமலேயே 12 நிமிடங்களில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஆனால், நாடாளுமன்றத்தை நடத்திச் செல்வதில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை யில்லை. அவர்கள்தான் அவையை நடத்தவிடாமல் செய்கிறார்கள் என்று பா.ஜ.க.வினர் கூறிவருகின்றனர்.
உண்மையில் நாடாளுமன்றம் செயல்படாமல் முடங்கியதற்கு காரணம் ஆளுங்கட்சிதான். நாங்கள் ஏதாவது ஒரு விஷயத்தை முன்வைத்து விவாதிக்க வேண்டும் என்று கோரும் போதெல்லாம் எங்களை பேச அனுமதிப்பதில்லை. எனது 52 ஆண்டுக்கால பொது வாழ்வில் இதுபோன்று நடப்பது இதுவே முதல் முறையாகும்.
பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறக்கூடாது என்பதுதான் மத்திய அரசின் நோக்கமாகும். மத்திய அரசின் இந்த போக்கை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதே நிலை தொடர்ந்தால் ஜனநாயகம் ஒழிக்கப்பட்டு சர்வாதிகாரம் தலைதூக்கி விடும்.
அதானியின் சொத்துமதிப்பு இரண்டு ஆண்டுகளில் எப்படி ரூ.12 லட்சம் கோடியாக அதிகரித்தது என்றுதான் 18 எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்புகின்றன.
இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரண நடத்த உங்களுக்கு (மத்திய அரசுக்கு) என்ன தயக்கம்? இதில் ஏதோ முறைகேடு இருக்கிறது என்பதால்தானே நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உடன்பட மறுக்கிறார்கள்.
நாங்கள் அதானி விவகாரத்தை எழுப்பினால் அதற்கு பதிலளிக்காமல் கவனத்தை திசைத்திருப்பும் விதமாக லண்டன் பேச்சு குறித்து ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள்.
நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தினால்தானே அதானி விவகாரத்தில் உண்மையில் நடந்திருப்பது என்ன என்பது தெரியவரும் என்றார் கார்கே.