பிரதமர் மோடி தலைமையில் இன்று ஒடிசாவின் முதல்வராக மோகன் சரண் மாஜி பதவியேற்க உள்ளார். அவரோடு, கே.வி.சிங் தியோ மற்றும் பிரவாதி பரிதா துணை முதல்வர்களாக பதவியேற்கின்றனர்.
கடந்த மாதம் லோக்சபா தேர்தலுடன் ஒடிசாவில் சட்டசபை தேர்தலும் நடந்து முடிந்தது. கடந்த 4-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் மொத்தம் 147 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 78 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. இதன்மூலம், தனி பெரும்பான்மையோடு ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை பாஜக பெற்றுக் கொண்டது.
இந்நிலையில், ஒடிசா தலைநகரான புவனேஸ்வரில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பாஜக மேலிட பார்வையாளர்களாக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் பூபேந்திர யாதவ் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், ஒடிசாவின் புதிய முதலமைச்சராக பழங்குடி சமுதாயத்தை சார்ந்த மோகன் சரண் மாஜி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், துணை முதல்வராக கே.வி.சிங் தியோவும், பிரவதி பரிதாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட 52 வயதான மோகன் சரண் மாஜி கியோஞ்சார் சட்டமன்றத் தொகுதியிலிருந்து எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் நான்கு முறை எம்எல்ஏவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், ஒடிசா மாநில முதல்வராக பதவியேற்க உள்ள மோகன் சரண் மாஜி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "ஜெகந்நாதர் அருளால் ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைக்கிறது. இந்த நேரத்தில் 4.5 கோடி ஒடிசா மக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பாஜகமீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்துள்ளனர். அந்த நம்பிக்கையை பாஜக அரசு காப்பாற்றும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த முதலமைச்சர் பதவி விழா, பிரதமர் மோடி முன்னிலையில் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள ஜனதா மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த பாஜக அரசின் பதவியேற்பு விழாவில் முதல்வர் மற்றும் துணை முதல்வர்கள் பதவியேற்க்கப்படுவதோடு, மாநில அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட மூத்த எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பங்கேற்பு விழாவில் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதால் புவனேஸ்வர் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பதவியேற்பு விழாவில் சுமார் 50,000-திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.