செய்திகள்

பருவமழை துவக்கமும் நோய் பரவலும்- சேலத்தில் சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சேலம் சுபா

மிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் துவங்கிய கோடை வெயிலின் தாக்கம் தற்போது படிப்படியாக குறைந்துள்ளது. இதையடுத்து தென்மேற்கு பருவ மழை துவங்கி உள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் டெங்கு காய்ச்சல் எலி. காய்ச்சல் காரணமாக 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைகளில் நோய் பாதித்த நிலையில் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் அம்மாநில அரசு நோய் தடுப்புக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக தமிழக கேரளா எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி நாகர்கோவில், தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசும் மேற்கொண்டு வருகிறது. இந்த மாவட்டங்களில் நோய் பாதிப்புகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    கேரளாவில் பரவிவரும் டெங்கு காய்ச்சல் எச்சரிக்கைகள் ஒருபுறம் இருக்க, பெய்து வரும் பருவமழையால் சளி காய்ச்சல் போன்ற பாதிப்புகளும் அதிகம் உருவாகியுள்ளது. இதனால், மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சென்னையில் கோரத்தாண்டவம் ஆடிய மழை சேலத்திலும் திடீர் திடீரென வந்து செல்கிறது. தமிழ்நாடு முழுக்க ஆங்காங்கே மழைப்பொழிவு துவங்கியுள்ளது. இந்நிலையில் சமீப நாட்களாக சளி காய்ச்சல் இருமல் போன்ற பாதிப்புகளுடன் சேலம் அரசு குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சேலம் மட்டுமின்றி தருமபுரி கிருஷ்ணகிரி நாமக்கல் கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வரும் மக்களுக்கும் நிவாரணம் தரும் மருத்துவமனையாக விளங்கும் இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இயல்பு நாட்களில் சிகிச்சைக்காக வருவோரின் சதவீதத்தை விட அதிக அளவில் நோயாளிகள் வருவது பருவமழை மாற்றத்தால் என்பதால் இது குறித்து முன்னெச்சரிக்கை தந்துள்ளனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

      “பெரும்பாலான தொற்று நோய்கள் பருவ மழையால் பரவுகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. எனவே பொதுமக்கள் நோய் பாதித்து அதன் பின்னர் சிகிச்சை பெறுவதைக் காட்டிலும் வருமுன் தடுப்பதே சிறந்ததாகும். சேலம் சரகத்தை பொறுத்தவரை டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் நான்கு மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்களும் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் கொசு உற்பத்தி ஆவதை தடுக்கும் வகையில் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் வீட்டு அருகில் உபயோகிக்காமல் போடப்பட்ட தேங்காய் சிரட்டை, குடம், அம்மிக்கல் உள்ளிட்டவைகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியமாகும். குடியிருக்கும் பகுதியைச் சுற்றிலும் ப்ளீச்சிங் பவுடர் தெளித்து தூய்மையாக பார்த்துக் கொள்ள வேண்டும். சளி காய்ச்சல் தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தாமாக மருத்துவம் செய்வதை தவிர்க்க வேண்டும். அதேபோல் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தனியார் மருந்து கடைகளில் மருந்து வாங்கி சாப்பிடும் பழக்கத்தை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். தொடர்ந்து காய்ச்சல் சளி இருமல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்” இவ்வாறு வருமுன் காக்கும் வழிமுறைகளைக் கூறி மக்களுக்கு விழிப்புணர்வு தந்துள்ளனர். இந்த எச்சரிக்கைகளை தமிழக மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் .

     மேலும் அதிகாரிகள் சொல்வதால் மட்டும் இல்லாமல் அன்றாடம் நாம் நம் வீட்டையும் உடலையும் தூய்மையாக வைத்து பருவநிலை மாற்றத்தை வரவேற்று ஆரோக்கியத்துடன் அனுபவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

சேதமடைந்த மரப்பொருட்கள்... குப்பைகளாக உங்கள் வீட்டில் உள்ளதா? அச்சச்சோ தவறாச்சே...!

குரு நானக் அருளிய அற்புதமான நல் உரைகள்!

சிவகார்த்திகேயனின் தாத்தாக்கள் ஒருகாலத்தில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களாம்!

கம்பவுன்டர்களை காணவே முடிவதில்லையே; யார் இவர்கள்? எங்கே போனார்கள்?

ஐயப்பன் தரிசனம் கார்த்திகை மாதத்தில் மட்டும்தானா?

SCROLL FOR NEXT