விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோறி சென்ற 13ம் தேதி முதல் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டு வருங்கின்றனர். விவசாயிகளுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மகள் மதுரா சுவாமிநாதன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மறைந்த வேளான் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை அறிவித்தது. இதற்காக விழா ஒன்றை இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் நேற்று நடத்தியது. இதில் காணொலி மூலம் கலந்து கொண்ட எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள் மதுரா சுவாமிநாதன் பேசும்போது, விவசாயிகளின் போராட்டம் குறித்தும் பேசினார்.
“பஞ்சாப் விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாகச் செல்கின்றனர். அவர்களுக்கு ஹரியானாவில் சிறைச்சாலை தயாராகி வருகிறது. டெல்லி உள்ளே வராமல் இருக்க பல தடுப்புகளும் போடப்பட்டுள்ளன. மேலும் அவர்களைத் தடுப்பதற்கான அனைத்து வேலைகளும் நடந்துக்கொண்டு வருகின்றன. இவையனைத்தையும் நான் செய்தித் தாள்களில்தான் பார்த்தேன். நமக்கு உணவு கொடுக்கும் விவசாயிகளிடம் நாம் பேச்சுவார்த்தையே நடத்த வேண்டும். குற்றவாளிகள் போல் விரட்டி அடிக்கக்கூடாது.
ஏனெனில் அவர்கள் ஒன்றும் குற்றவாளிகள் அல்ல விவசாயிகள். இந்தியாவின் முன்னணி விஞ்ஞானிகள் அனைவரும் இங்கு உள்ளீர்கள். உங்கள் அனைவரிடமும் நான் ஒன்றே ஒன்று மட்டும் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பிரச்சனைக்கு நீங்கள் அனைவரும் சேர்ந்து ஒரு தீர்வு காண வேண்டும். இதுதான் என்னுடைய முதன்மையான மற்றும் முக்கியமான வேண்டுகோள் ஆகும்.” இவ்வாறு அவர் கூறினார்.
பிலிப்பைன்ஸில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையத்தின் போர்டு நபராக இருக்கும் மதுரா, மற்றொரு பேட்டியில் இதைப் பற்றிக் கூறியதாவது, “என் தந்தை டெல்லியில் விவசாய விஞ்ஞானியாக இருக்கும்போது, பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகளுடன் ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பில் இருந்தார். காலையில் எழுந்தவுடன் செய்தி படிக்க நேரமில்லை என்றாலும் விவசாயிகளைப் பற்றிய எதாவது செய்தி வந்துள்ளதா என்றுத்தான் முதலில் பார்ப்பார். பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் நல்ல வருமானத்தை மட்டும்தானே கேட்கிறார்கள். அதற்குத்தானே இந்த கோரிக்கைகளை முன் வைக்கிறார்கள்.
நாம்தான் புதுத் தொழில்நுட்பத்தையும், புது வளர்ப்பு முறைகளின் யோசனைகளையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். நாம் அவர்களுக்கு ஒரு ஏற்ற விடையைக் கொடுக்காமல் உற்பத்தியை நிறுத்துங்கள் என்று கூறிவிட முடியாதல்லவா? பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் பசுமை புரட்சியின் மூலம் கொஞ்சமாவது வருமானத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அதுகூட இல்லாததால் மற்ற மாநிலங்களின் விவசாயிகள் இன்னும் குரல்களை எழுப்ப முடியாமல் பலவீனமாகவே இருக்கிறார்கள்” என அவர் பேசினார்.