எந்த ஒரு இந்தியத் தனி நபரின் அடையாளத்துக்கும் நமது இந்திய அரசால் வழங்கப்பட்ட ஆதார் அட்டை மிகவும் முக்கியம். இந்த ஆதார் எண்ணைக் கொண்டே வங்கி பரிவர்த்தனை, ரேஷன் பொருட்கள் வாங்குதல், ஏன் ஒரு சிம் கார்டு வாங்குவதற்கும் கூட இந்த பன்னிரண்டு இலக்கம் கொண்ட ஆதார் எண்ணே அவசியம் என்பதை அறிவோம்.
இந்த ஆதார் அட்டையைப் போலவே, தமிழக மக்களுக்கென்று தனியாக ஒரு ஐ.டியை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின் முகமை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியப் பிரஜைகள் அனைவருக்கும் ஒரு ஆதார் எண் உள்ளது போல, தமிழக மக்கள் அனைவருக்கும் ஒரு தனி அடையாள எண்ணை உருவாக்க தமிழக அரசு முயற்சி செய்து வருவதாகத் தெரிகிறது.
Makkal ID என அழைக்கப்படும் இந்த அடையாள அட்டை, 10 முதல் 12 இலக்கங்கள் கொண்டு உருவாக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக இந்த அடையாள எண்ணை வழங்கும் மென்பொருளைத் தயாரிப்பதற்கு டெண்டர் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த மென்பொருள் தயாரானதும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மக்கள் ஐ.டி.யைக் கொண்டே அரசின் அனைத்துவித நலத்திட்ட உதவிகளையும் பெறும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாநில குடும்ப தரவு தளம் ஒன்றும் உருவாக்கப்பட உள்ளதாகக் சொல்லப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படலாம் என்றும் கூறுகிறார்கள்.
இனிவரும் காலங்களில் மின் இணைப்பு மற்றும் வங்கி சேவைகள் போன்ற பல்வேறு செயல்முறைகளுக்கும் ஆதார் அட்டைக்கு பதில், இந்த ‘மக்களை ஐ.டி.’யையே பயன்படுத்திக் கொள்ளலாமா என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.