சமீபமாக ஏ ஐ (Artificial Intellijence) எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணினித் தொழில்நுட்பத்தின் புதிய கண்டுபிடிப்பான இந்த செயற்கை நுண்ணறிவு மனிதனை அறிவியலின் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்கிறது. மனிதன் செய்யும் வேலைகளை இந்த செயற்கை நுண்ணறிவே செய்து விடும் நிலையில் ஒரு பக்கம் வியந்தாலும் மறுபக்கம் மனிதர்களின் வேலை வாய்ப்பும் பறிபோகும் என்ற அச்சமும் எழுந்துள்ளதை மறுக்க முடியாது. ஆனால் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விலைமதிப்பற்ற உயிர்களையும் காக்க முடியும் எனும் செய்தி மகிழ்வைத்தருகிறது .
ஆம். இந்தியாவிலேயே முதல்முறையாக கோவையில் யானைகள் உயிரிழப்பை தடுக்க ஏ ஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. கோவை எட்டிமடை வாளையார் ரயில் பாதையில் ஏ மற்றும் பீ ட்ராக் ரயில் பாதைகள் உள்ளன. இதில் 2.8 கிலோமீட்டர் தொலைவு கொண்ட ரயில் பாதை அடர் வனத்திற்குள் செல்கிறது. இந்த பீ லைன் ரயில் பாதையில் அடிக்கடி ரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. யானைகள் சுரங்க பாதையை கடந்து செல்லும் வகையில் 60 அடி அகலம் மற்றும் 20 அடி உயரம் என்ற அடிப்படையில் சுரங்கப்பாதை பணி ரயில்வே துறை சார்பில் நடந்து வருகிறது.
இந்த சுரங்கப்பாதை பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. அதே நேரத்தில் யானைகள் சுரங்க பாதையில் செல்கிறதா அல்லது ரயில்பாதையில் கடக்கிறதா என்று கண்காணிக்க இப்பகுதியில் 12 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு 7.3 கோடி மதிப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த கோபுரத்தின் மேல் அதிநவீன 360 டிகிரி சுழலும் வகையிலான தெர்மல் கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது. இந்த கேமராக்கள் மூலம் யானைகள் ரயில் பாதையில் 150 மீட்டருக்கு வரும் முன்பே அது தொடர்பான தகவல் குறுஞ்செய்தியாக ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர், வனத்துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இதன் மூலம் உடனடியாக ரயிலை நிறுத்தி விபத்தை தடுக்க முடியும். இதற்காக பிரத்யேக கட்டுப்பாட்டு அறை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.
இந்த ஏ ஐ தொழில்நுட்பத்தினால் யானை நடமாட்டம் மட்டுமின்றி காட்டுத் தீ, மர்ம நபர்கள் நடமாட்டம் ஆகியவற்றையும் கண்டறிய முடியும் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் ரயில் பாதை ஏ ட்ராக்கில் 5 கேமராக்கள் பொருத்தப்பட்டு பணிமுடிந்த நிலையில் பி ட்ராக்கில் 12 கேமராக்கள் பொருத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த டெக்னாலஜி இந்தியாவிலேயே மதுக்கரையில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த தொழில்நுட்ப பணிகள் விரைவில் நிறைவு பெற்று இன்னும் ஒரு மாதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.