ஏர் ஹோஸ்டஸ் போல அரசுப் பேருந்துகளில் பணிப்பெண்களை நியமிக்க மகாராஷ்டிரா மாநில அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக மும்பை - புனே வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகளில் ஷிவ்நேரி சுந்தரிகள் என்ற பெயரில் இவர்களைப் பணியமர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில், பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவரின் நினைவாக அவரது மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் முதல்வர் அலுவலகம் அருகே, 'கிரை ஆஃப் தி ஹவர்' என்ற தலைப்பில் ஒரு பெண் கதறுவதுபோல் வைக்கப்பட்டுள்ள அந்தச் சிலை, பார்ப்பவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும், உயிரிழந்த பெண் மருத்துவருக்கு மரியாதைக் குறைவை ஏற்படுத்துவதுபோல் உள்ளதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.
ஆனால், இந்தச் சிலை விதிமுறைகளை மீறாத வகையில், உயிரிழந்த பெண் மருத்துவர் அனுபவித்த வலியையும், வேதனையையும் வெளிப்படுத்துவதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் ஆறரை லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டதாகவும், அதில் 34 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு தகவல் தெரிவித்துள்ளார். கொசு, விலங்குகளால் பரவும் நோய்கள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் நோயால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது எனவும் இவர் கூறியுள்ளார்!
ஹெச்.வினோத் இயக்கும் 'தளபதி 69' படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஒவ்வொரு நாளும் ஒரு அப்டேட்டை வெளியிட்டு வருகிறது. அதன்படி, ‘தளபதி 69’ படத்தில் வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அந்த வகையில் தற்போது படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக அப்படக்குழு அறிவித்துள்ளது.
கால்பந்து வரலாற்றில் 46 கோப்பைகள் வென்ற அணிகளில் இடம் பெற்ற முதல் வீரர் ஆனார் லியோனல் மெஸ்ஸி. மேஜர் லீக் சாக்கர் போட்டியில் இன்டர் மியாமி அணியின் வெற்றிக்கு வழி வகுத்து இந்தப் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.