தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளது. நாளை மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம் மற்றும் புதுச்சேரியை ஒட்டிய பகுதிகளை நோக்கி இது நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கனமழை மற்றும் போதிய பயணிகள் வருகை இல்லாததால் சென்னையில் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டெல்லி, மஸ்கட், அந்தமான், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்குச் செல்லவிருந்த விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மேம்பாலத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை என்று பெருநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. சென்னை மாநகரில் உள்ள அனைத்து போக்குவரத்து காவலர்களுக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வாகனங்களை நிறுத்துவதால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
‘மழையால் பாதிக்கப்பட்டு உதவி வேண்டுபவர்கள் தேமுதிக அலுவலகத்தை தங்கிக்கொள்ளவும், உணவு அருந்தவும் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'கங்குவா' திரைப்படத்தில் AI தொழில்நுட்பம் பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த 'GOAT' திரைப்படத்தில் இளம் வயது விஜய்யை AI தொழில்நுட்பம் மூலமாகக் கொண்டு வந்திருந்தனர். அதேபோல, தற்போது சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படத்திலும் AI தொழில்நுட்பம் பயன்படுத்த இருக்கின்றனர். தமிழில் சூர்யா டப்பிங் பேசி இருக்கிறார். அதேபோல மற்ற மொழிகளிலும் சூர்யா குரலையே பயன்படுத்த இருக்கிறார்களாம். AI மூலமாக சூர்யா குரலை மற்ற மொழிகளுக்கும் மாற்ற இருக்கின்றனர். இந்தத் தகவலை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறி இருக்கிறார்.