இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது நாளை நள்ளிரவு வரை பல அடி உயரத்துக்கு கடல் அலைகள் கொந்தளிக்கும் என்று இந்திய கடல்சார் தகவல் மையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் கூடுதல் ரயில் சேவைகளை மேற்கொள்கிறது மெட்ரோ ரயில் நிர்வாகம். கனமழை தொடர்வதால் பயணிகள் வசதிக்காக ரயில் சேவைகளை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. வண்ணாரப்பேட்டை - ஆலந்தூர் வழித்தடத்தில் 3 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயிலும், சென்னை சென்ட்ரல் - செயின்ட் தாமஸ் வழித்தடத்தில் 5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயிலும் இயக்கப்படுகிறது. மேலும், விம்கோ நகர் - விமானநிலையம் வழித்தடத்தில் 6 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயிலும் இயக்கப்படுகிறது.
வடகிழக்கு பருவ மழையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மாநகராட்சி ஊழியர்கள், ஊடகத்துறையினருக்கு டாக்ஸிசைக்லின்(Doxycyline) மாத்திரைகள் வழங்க முடிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு பொது மருத்துவமனைகளில் இந்த மாத்திரைகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வெளியான 'Black' திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்திருந்தார். நான்கு நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள இந்தத் திரைப்படம் இதுவரை உலகளவில் 3.6 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மகளிர் உலகக் கோப்பை 9வது டி20 கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் கடைசி லீக் போட்டியில், ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஹெய்லி மேத்யூஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதுகிறது.