தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்குக் கிழக்கு தென்கிழக்கு திசையில் 360 கி.மீ. தொலைவில் இது நிலை கொண்டுள்ளது எனவும் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை சென்னை அருகே கரையைக் கடக்க வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாகவும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாலும் சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகள் தங்கள் விமானக் கட்டணப் பணத்தை வாபஸ் பெறலாம் அல்லது வேறொரு தேதியில் பயணம் செய்யலாம் என குறுஞ்செய்தி வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகள் சென்னை மாநகராட்சியால் வழங்கப்படுகின்றன எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் நடிப்பில் இம்மாதம் 10ம் தேதி வெளியான 'வேட்டையன்' திரைப்படம் தமிழகத்தில் நல்ல வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா டக்குபதி, ரித்திகா சிங் போன்றோர் நடித்த இந்தத் திரைப்படம் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி இருந்தது. இந்நிலையில், தற்போது வரை தமிழகத்தில் மட்டும் இந்தத் திரைப்படம் 86 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் இரு அணிகளுக்கும் இந்தத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நிலையில், பெங்களுருவில் போட்டி நடைபெறும் பகுதியில் மழை பெய்து வருவதால் இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.