‘இரண்டாவது முறை தன்னை கொலை செய்ய நடைபெற்ற முயற்சிக்கு ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் செய்துவரும் பொய் பிரச்சாரம்தான் காரணம்’ என டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். புளோரிடாவில் தனது இல்லத்தில் டிரம்ப் கோல்ஃப் விளையாடிக்கொண்டிருந்தபோது, துப்பாக்கியால் டிரம்பை நோக்கி சுட முயன்ற ரியான் வெஸ்லி ரூத் என்பவரை உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த நபரின் சமூக வலைத்தள பதிவுகளை வைத்துப் பார்க்கும்போது அவர் ஜோ பைடனின் ஆதரவாளர் என தெரிய வந்துள்ளது.
இதனால் டிரம்ப், தான் அதிபரானால் அமெரிக்காவில் ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிடும் என பைடனும், கமலா ஹாரிஸும் கூறி வருவதை நம்பியே தன்னைக் கொல்ல சிலர் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ‘அதிபர் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிசை கொல்ல ஏன் யாரும் முயற்சிக்கவில்லை?’ என எலான் மஸ்க் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி இன்று மிலாடி நபி அரசு விடுமுறை தினத்தில் பல பகுதிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக புகார் எழுந்துள்ளதாகக் கூறியுள்ளார். மாணவர்களை சீருடைகளில் பள்ளிகளுக்கு வர வைக்காமல் சாதாரண உடைகளில் பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். அதிக வெப்பநிலையால் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
பாலிவுட்டில் வெளியாகி இந்தியா முழுவதும் அனைவராலும் கண்டு ரசிக்கப்பட்ட திரைப்படத் தொடர் ‘தூம்.’ இதுவரை 3 பாகங்களை வெற்றிகரமாக கடந்த இந்த ‘தூம்’ படத்தின் 4வது பாகத்திற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளன. அதில் ஷாருக்கான் இந்தப் படத்தின் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்ற செய்தி ஏற்கெனவே வெளியாகி இருந்த நிலையில், தற்போது இந்தப் படத்தின் வில்லன் பாத்திரத்தில் நடிப்பதற்கு சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநில கிரிக்கெட் வாரியம் நடத்திய Invitational tournamentல் கர்நாடகா 11க்கு எதிராக 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்.
இவர் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும், 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளும் கோவா அணிக்காக வீழ்த்தியுள்ளார் அர்ஜுன் டெண்டுல்கர்.