கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் முடிவுக்கு வரவில்லை. இந்தப் போரில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தாலும், இதுவரை எந்தத் தீர்வும் இதற்குக் கிடைக்கவில்லை. இந்நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக போரில் ஈடுபட்டு வரும் உக்ரைனுக்கு 425 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
சுமார் 80 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவின் சில பகுதிகளில் வால் நட்சத்திரம் தென்படத் தொடங்கியதாக வானிலை ஆர்வலர்கள் தகவல் அளித்துள்ளனர். சூரிய மண்டலத்தில் நுழைந்துள்ள C/2023 A3 என்ற இந்த அரிய வகை வால் நட்சத்திரம், கடந்த 14ம் தேதி தொடங்கி, வரும் 24ம் தேதி வரை தென்பட உள்ளதாகக் கூறியுள்ளனர். தமிழ்நாடு, லடாக், கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பகுதிகளில் இரவில் இதை தொலைநோக்கி அல்லது பைனாகுலர்களால் தெளிவாகப் பார்க்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடசென்னை அருகே கரையை கடந்தது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை கடந்து குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
'அமரன்' திரைப்படத்தின் அடுத்த பாடலான 'வெண்ணிலவு சாரல்’ இன்று வெளியாகும் என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. குல்தீப் யாதவ், சர்ஃபராஸ் கான் உள்ளிட்டோர் பிளேயிங் 11ல் இடம் பெற்றுள்ளனர். காயம் காரணமாக ஷுப்மன் கில் பிளேயிங் 11ல் இடம்பிடிக்கவில்லை. மழை காரணமாக முதல் நாள் போட்டி கைவிடப்பட்ட நிலையில், இன்று 2வது நாள் போட்டி தொடங்கியுள்ளது.