அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரிசோனா மாகாணம் டெம்பேவில் உள்ள சதர்ன் அவென்யூ ப்ரீஸ்ட் டிரைவ் அருகே கமலா ஹாரீஸின் பிரச்சார அலுவலகம் மீது மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளார். அந்த அலுவலகத்தில் யாரும் இல்லாததால் எந்த பாதிப்பு ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த லோவி என்ற நிறுவனம் புவிசார் அரசியலை சமாளிக்கும் திறனை வைத்து ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடுகள் (Asia Power Index) பட்டியலைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. ஆசியா - பசுபிக் பிராந்தியத்தில் உள்ள 27 நாடுகளின் பொருளாதாரத் திறன், ராணுவத் திறன் மற்றும் ராஜதந்திர செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில், தயாரிக்கப்பட்ட இந்தப் பட்டியலில், முதலிடத்தில் அமெரிக்கா, 2வது இடத்தில் சீனா, 3வது இடத்தில் இந்தியா, 4வது இடத்தில் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. கடந்த முறை இப்பட்டியலில் 4வது இடத்தில் இருந்த இந்தியா இம்முறை ஜப்பானை பின்னுக்குத் தள்ளி 3வது இடம் பிடித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகப் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விக்கிரவாண்டியில் வரும் அக்டோபர் மாதம் 27ம் தேதி அக்கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ள நிலையில், மாநாடு குறித்து மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
கோவையில், யுவன் சங்கர் ராஜாவிடம் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளது குறித்துக் கேட்டபோது, "விஜய் சினிமாவில் மிகப்பெரிய மாஸ் ஹீரோவாக திகழ்கிறார். அதுபோல அவர் அரசியலில் ஜொலிப்பார் என்று நம்புகிறேன். அவருக்கு 'ஆல் தி பெஸ்ட்.' மேலும், அவர் கட்சிக்கு பாடல் வேண்டும் என்று கேட்டால் கண்டிப்பாக நான் அதைப் பாடிக் கொடுப்பேன்" என்றும் கூறியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசியின் சிறந்த பந்து வீச்சாளர் பட்டியலில் தொடர்ந்து முதல் 2 இடங்களில் அஸ்வின் மற்றும் பும்ரா உள்ளனர். இருவரும் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக பந்து வீசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்பட்டியலில் ஜடேஜா ஒரு இடம் முன்னேறி 6வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.