ஐரோப்பிய நாடான பிரான்சில், போதை பொருள் கடத்தல் மற்றும் ஆன்லைன் குற்றங்களுக்கு டெலிகிராம் செயலி அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு, டெலிகிராம் செயலியில் பயனர்களுக்கு இடையே பகிரப்படும் தகவல்களை முறையாக கண்காணிக்க தவறியதாகவும் கூறி, அந்த செயலியின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ் (39) கைது செய்யப்பட்டார்.
இந்நேரத்தில் இந்தியாவில் சூதாட்டம், மிரட்டி பணம் பறித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு 'டெலிகிராம்' பயன்படுத்தப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியதால், நம் நாட்டில் செயல்படும் சமூக ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய சட்ட விதிகளை 'டெலிகிராம்' செயலி பின்பற்றுகிறதா என்பதை கண்டறியும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.
ஒடிசாவின் புரி மாவட்டத்தில் வேகமாக பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. பறவைக் காய்ச்சல் கோழிகளிடம் இருந்து பரவும் என்பதால், அங்கு பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோழிகள் கோணிப் பைகளில் போடப்பட்டு பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டு வருகின்றன. காய்ச்சல், தொண்டை புண், இருமல், தலைவலி மற்றும் தசை வலிகள் இதன் அறிகுறிகளாக கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்-16 வகை மொபைல்கள் செப்டம்பர் 9-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. iPhone 16 சீரீசில், 4 விதமான மாடல்களும், மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் வாட்ச் 10 சீரிஸ், AirPods 4 ஆகியவையும் அறிமுகம் செய்யப்படுகின்றன.
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சமீபத்திய தகவல்களுடன் ஆதாரைப் புதுப்பிக்க வேண்டும் என்று விளக்கம் அளித்து, ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க செப்டம்பர் 14 வரை அவகாசம் என்று ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.
அக்டோம்பர் 6 -இல் இந்ததிய - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டி20 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததால், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் மற்றும் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகிய இரண்டு இடங்களில் பத்து அணிகள் 23 ஆட்டங்களில், 18 நாட்கள் பங்கேற்கும் என புதிய அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.