கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில் என்.எல்.சி நிர்வாகம் சார்பில் இரண்டாவது நாளாக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.நிறுவனத்தில் 2வது சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கத்தாழை, கரிவெட்டி உள்ளிட்ட கிராமங்களிருந்து நிலம்கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கையகப்படுத்திய நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு கேட்டும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கக் கோரியும் கிராம மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த சூழலில் என்.எல்.சி சுரங்கத்தில் இருந்து பரவனாற்றுக்கு உபரிநீரை வெளியேற்றுவதற்காக வளையமாதேவி கிராமத்தில் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் வழியாக ஒன்றரை ஏக்கர் அளவில் வடிகால் வாய்க்கால் வெட்டும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக, அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயல்களுக்குள் ராட்சத இயந்திரங்களை இறக்கி பயிர்களை அழித்ததால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.
இந்நிலையில், வளையமாதேவி கிராமத்தில் இரண்டாவது நாளாக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நெல் வயல்களில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பள்ளம் தோண்டும் பணி முடிவடைந்த பிறகு, அந்த வழியாக குழாய்கள் பதிக்கும் பணி தொடங்க உள்ளது. இதையொட்டி, வளையமாதேவி கிராமத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் 300 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கிராமத்திற்கு செல்லும் சாலைகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
உள்ளூர் மக்களை மட்டும் விசாரணைக்கு பிறகு அனுமதித்து வருகின்றனர். இதனால், வளையமாதேவி கிராமத்தில் இரண்டாவது நாளாக பதற்றமான சூழல் நிலவுகிறது. என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணியை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு பேருந்துகள் மீது இரவில் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை முதல் வழக்கம் போல் போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது.இது ஒரு பக்கம் இருக்க, பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.