செய்திகள்

‘எனக்காக யாரும் காத்திருக்கக் கூடாது’ சிக்னலை திறக்க உத்தரவிட்ட சித்தராமையா!

கல்கி டெஸ்க்

ர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சித்தராமையா பொறுப்பேற்று இருக்கிறார். இவர், தம்மால் பொதுமக்கள்  போக்குவரத்து சிக்கலில் அவதிப்படுவதைத் தவிர்க்க, ‘ஜீரோ டிராபிக்’ நடைமுறையை ரத்து செய்வதாக அறிவித்து இருக்கிறார். முதலமைச்சர் சித்தராமையாவின் கான்வாய் சாலைகளில் பயணிக்கும்போதெல்லாம் அந்த சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று சித்தராமையா தனது பேரனின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்து யெலஹங்காவில் உள்ள மன்சென்ஹல்லி சாலையில் பயணம் செய்து இருக்கிறார். அப்போது சுமார் 20 கி.மீ. தொலைவு இருக்கும் இந்த சாலையில் பொதுமக்கள் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதோடு, கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பெரிதும் விமர்சனங்களும் எழுந்தன.

இதைத் தொடர்ந்து, போலீஸ் கமிஷ்னரை அழைத்துப் பேசிய முதலமைச்சர் சித்தராமையா, ‘தனது கான்வாய் செல்லும் சாலைகளில் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்தி வைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்வதை இனி தவிர்க்கும்படி கூறி இருப்பாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இது சம்பந்தமாக அதிகாரிகள் கூறுகையில், "வழக்கமாக முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள் எனில் அவருடன் குறைந்தது ஐந்து கார்கள் செல்லும். இது தவிர அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் உடன் சென்றால் இந்த கார்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே, இந்த வாகனங்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட சாலைகளில் பயணிக்கும் மற்ற வாகனங்கள் சில நிமிடங்கள் வரை நிறுத்தி வைக்கப்படும். இதுதான் 'ஜீரோ டிராபிக்' முறை என்று அழைக்கப்படுகிறது. இதில், வேலைக்குச் செல்வோர், மருத்துவமனைக்குச் செல்வோர், பள்ளி கல்லூரிகளுக்குச் செல்வோர் என பலதரப்பட்ட மக்களும் பாதிக்கப்படுவர். எனவே, இந்த முறையை நிறுத்த வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில்தான், முதலமைச்சர் சித்தராமையா நேற்று தனது பயணத்தின்போது இதை நேரில் பார்த்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, ‘இனி தன்னுடைய கான்வாய்க்கு ஜீரோ டிராபிக் முறை பின்பற்ற வேண்டியதில்லை’ என்று கூறி இருக்கிறார்" என தெரிவித்து உள்ளனர்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்பு கர்நாடக மக்களிடையே, குறிப்பாக பெங்களூரு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று இருக்கிறது. காரணம், சர்வதேச அளவில் டிராபிக் மிகுந்த நகரங்களில் பெங்களூரு முக்கியமான இடமாகும். மேலும், தற்போது கோடை காலம் என்பதால் வெய்யிலும் மக்களை பெரிதும் வாட்டி வதைக்கிறது. இந்த நிலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மக்களை சாலைகளில் நிறுத்தி வைப்பது என்பது மிகுந்த எரிச்சலுக்கு உள்ளாக்கி இருந்தது. இந்த நிலையில்தான் ஜீரோ டிராபிக் முறையை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சித்தராமையா கொண்டு வந்திருப்பது பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பைப் பெற்று இருக்கிறது.

சமூக வலைதளங்களின் நன்மை, தீமைகள் தெரியுமா உங்களுக்கு?

உலகிலேயே மிகச்சிறிய நுழைவாயில் கொண்ட அதிசய சிவன் கோயில்!

உறையும் அதிசய நீர்வீழ்ச்சி இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?

Vasuki Indicus: 47 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த உலகின் மிகப்பெரிய பாம்பு!

தன்னம்பிக்கை வளர நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT