நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந் தோறும் திங்கட்கிழமை அன்று பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம். நேற்றைய தினம் நடைபெற்ற முகாமில் காலை முதலே ஆர்வமுடன் பொதுமக்கள் மனு அளிக்கக் காத்திருந்தனர். அப்போது மூன்று வயதான பெண் குழந்தை தனது தந்தையுடன் மழலை நடையுடன் கையில் மனுவை ஏந்தி ஆட்சியர் அலுவலகம் வந்த சம்பவம் அங்கிருந்தவர்களை திரும்பி பார்க்கச் செய்தது.
இது பற்றி அந்தக் குழந்தையிடம் விசாரித்தபோது, தனது பெயர் ஸபா ஹாதீயா. நான் மேலப்பாளையம் அம்பிகாபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வருகிறேன். அங்கு எங்களுக்கு கழிப்பிடம், விளையாட்டு உபகரணங்கள் உள்பட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. அங்கன்வாடியில் ஒண்ணுமே சரியில்லை என்று மழலை மொழியில் குழந்தை ஹாதீயா தெரிவித்ததையடுத்து, தொடர்ந்து தனது தந்தையுடன் சென்று மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனை சந்தித்து மனு அளித்தார்.
குழந்தை ஸபா ஹதீயாவின் தந்தை ரசூல் காதர் மீரான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த அங்கன்வாடியில் பயின்று வருகின்றனர். குழந்தைகளுக்கு சத்துணவு முட்டைகள் கொடுப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அந்த அங்கன்வாடி கட்டிடம் மிகவும் பழமையானதாக இருக்கிறது. தினசரி அங்கு பயிலும் குழந்தைகளுக்கு அருகிலேயே கழிப்பிட வசதி, விளையாட்டு உபகரணங்கள் வசதி முறையாக இல்லை. நீண்ட தூரம் உள்ள தொடக்கப்பள்ளியில் சென்றுதான் கழிவறையைப் பயன்படுத்த வேண்டிய நிலை இருப்பதாக எனது மகள் என்னிடம் தெரிவித்தார்.
மேலும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வேண்டும் என்று விரும்பியதையடுத்து, எனது மகள் இன்று மனு அளித்துள்ளார். பெற்றோர்களைப் பிரிந்து அங்கன்வாடி செல்வதற்கே அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு மத்தியில் அங்கன்வாடிக்கு ஆர்வமுடன் செல்வதோடு மட்டுமல்லாமல் அங்கு அடிப்படை வசதிகள் தேவை குறித்து துணிச்சலுடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த குழந்தை ஸபா ஹாதீயாவின் செயல் பாராட்டுக்குரியது.