சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டை இனி வாட்ஸ் அப்-லேயே எடுத்துக்கொள்ளும் புதிய வசதி இன்று முதல் அமலுக்கு வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் இதுகுறித்து பேசிய போது “ மெட்ரோ ரயில் நிலையங்களில் வாட்ஸ்அப் எண் காட்டப்படும். அதன்பிறகு, அது புறப்படும் இடம் மற்றும் சேருமிடத்திற்கான விருப்பங்களை காட்டும். பயணிகள் தங்கள் பயண விவிரங்களை உள்ளிட்டால் இறுதியாகப் பயணிகளை கட்டண விருப்பங்களுக்கு அழைத்துச் செல்லும். டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் அல்லது கூகுள் பே என எதுவாக இருந்தாலும், பணம் செலுத்த பல விருப்பங்கள் கிடைக்கும். பின்னர் பயண டிக்கெட் பயணியின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பப்படும் ” என்று தெரிவித்தார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது மக்களின் முதன்மையான போக்குவரத்து முறைகளில் ஒன்றாக மெட்ரோ ரயில் சேவை மாறி உள்ளது. நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினமும் சராசரியாக ஆயிரக்கணக்கானோர் மெட்ரோ ரயிலில் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
சென்னையில் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. பீக் ஹவர்ஸ் என்று குறிப்பிடப்படும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது.
மெட்ரோ ரயிலில் பயணிக்க வேண்டும் எனில் ரயில் நிலையங்களுக்கு நேரில் சென்று பொதுமக்கள் டிக்கெட் எடுத்துகொள்ளலாம். மேலும் QR குறியீடு, பயண அட்டை போன்ற நடைமுறைகளில் டிக்கெட் எடுத்து கொள்ளலாம். இந்த நிலையில் வாட்ஸ் ஆப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை மெட்ரோ அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய முறை இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.