இளம் மல்யுத்த வீரர் சாகர் தன்கர் என்பவரை கொலை செய்த வழக்கில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற சுஷில்குமார் தில்லி திகார் சிறையில் சரணடைந்தார். அவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் கலகம் விளைவித்தல், சட்ட விரோதமாகக் கூடியது, சதித்திட்டம் தீட்டியது என பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. முழங்காலில் அறுவைச் சிகிச்சை செய்துகொள்வதற்காக அவருக்கு கடந்த ஜூலை 23 முதல் 30ம் தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. தன்கர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சுஷில்குமாரை பிரதான குற்றவாளியாக தில்லி போலீஸார் அறிவித்து, அவர் மீது 170 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி தில்லி சத்ரசால் விளையாட்டரங்கத்தின் வாகன நிறுத்துமிடத்தில் சுஷில்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் 23 வயதான சாகர் தன்கர், அவரது நண்பர் சோனு மற்றும் மூவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த சாகர் தன்கர் உயிரிழந்தார்.
இந்த நிலையில், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில்குமாரை தில்லி போலீஸார் கடந்த 2021 மே மாதம் முந்திகா என்னுமிடத்தில் வைத்துக் கைது செய்தனர். உயிரிழந்த இளம் மல்யுத்த வீரர் தன்கர், தில்லி மாதிரி நகரில் சுஷில்குமாருக்குச் சொந்தமான வீட்டில் வசித்து வந்துள்ளார். வீட்டை காலி செய்வது தொடர்பாக இருவரிடையே மோதல் இருந்துவந்துள்ளது என்று போலீஸார் தனது முதல்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.