சபரிமலையில் இந்த வருடத்துக்கான மண்டல கால பூஜைகளுக்காக ஐயப்பன் கோயில் நடை இம்மாதம் 16-ம் தேதி மாலை திறக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சபரிமலையில் இம்மாதம் 16-ம் தேதி மண்டல கால பூஜைகளுக்காக ஐயப்பன் கோயில் நடை திறக்கப் படுகிறது. அதற்கு மறுநாள் (17ம் தேதி) முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கப்பட்டு, டிசம்பர் 27-ம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது.
இந்நிலையில், சபரிமலைக்கு தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று காணொலியில் நடைபெற்றது.
கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் புதுச்சேரி சார்பில் அமைச்சர் சந்திரா பிரியங்கா, தமிழ்நாடு, ஆந்திரா தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கேரள அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
சபரிமலையில் இவ்வருட மண்டல பூஜை காலத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். மேலும், நிலக்கல், செங்கனூர் உள்பட கேரளாவில் 12 இடங்களில் உடனடி முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்படும். முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் இந்த மையங்களில் உடனடி முன்பதிவு செய்யலாம்.
இதற்காக புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை பக்தர்கள் கொண்டு வரக் கூடாது. பம்பை நதியில் குளித்தபின், அங்கேயே ஆடைகளை வீசக் கூடாது. 15 இருக்கைகளுக்கு குறைவாக உள்ள சிறிய வாகனங்கள் பம்பை வரை செல்ல அனுமதிக்கப்படும். பம்பையில் பக்தர்களை இறக்கி விட்ட பின்னர் அந்த வாகனங்கள் நிலக்கல்லுக்கு திரும்பி விட வேண்டும்.
இவ்வாறு கேரள அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறினார்.